14
இஸ்ரவேலின் மூப்பார்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் என்னோடு பேச உட்கார்ந்தார்கள். கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்; “மனுபுத்திரனே, இம்மனிதர்கள் உன்னோடு பேச வந்திருக்கிறார்கள். என்னிடம் ஆலோசனை கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அம்மனிதர்கள் இன்னும் தங்கள் அசுத்தமான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பாவத்தை உண்டுபண்ணுபவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை இன்னும் வழிபடுகிறார்கள். எனவே, என்னிடம் ஆலோசனை கேட்க எதற்காக அவர்கள் வரவேண்டும்? அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேனா? இல்லை! ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன். ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’
“எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள். இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான். நான் அவனுக்கு எதிராகத் திரும்புவேன். நான் அவனை அழிப்பேன். அவன் மற்ற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பான். ஜனங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பார்கள். நான் அவனை எனது ஜனங்களிலிருந்து விலக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்! ஒரு தீர்க்கதரிசி முட்டாளைப்போன்று தன் சொந்தமாக ஒரு பதிலைச் சொன்னால், அப்பொழுது நான் அவன் எவ்வளவு மதியீனன் என்பதை அவனுக்குக் காட்டுவேன். நான் அவனுக்கு எதிராக எனது வல்லமையைக் காட்டுவேன்! நான் அவனை அழித்து எனது இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து விலக்குவேன். 10 எனவே, ஆலோசனைக்கு வருபவன் பதில் சொல்லும் தீர்க்கதரிசி, என இருவரும் ஒரே தண்டனையைப் பெறுவார்கள். 11 ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
Jerusalem Will Be Punished
12 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 13 “மனுபுத்திரனே, என்னை விட்டு விலகி எனக்கு எதிராகப் பாவம் செய்யும் எந்த நாட்டையும் நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுவதை நிறுத்துவேன். நான் பசி காலத்திற்குக் காரணம் ஆவேன். அந்நாட்டை விட்டு மனிதர்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 14 நான் அந்நாட்டை அங்கு நோவா, தானியேல், யோபு போன்றவர்கள் வாழ்ந்தாலும் கூடத் தண்டிப்பேன். தங்கள் நற்குணத்தினால் அம்மனிதர்கள் தம் சொந்த உயிரைக் காப்பாற்றமுடியும். ஆனால் அவர்களால் முழு நாட்டையும் காப்பாற்ற முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
15 தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது. 16 நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த மகன்கள் அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
17 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டுக்கு எதிராகப் போரிட ஒரு பகைப்படையை அனுப்பலாம். அவ்வீரர்கள் அந்நாட்டை அழிக்கலாம். நான் அந்நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 18 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாக அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
19 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டிற்கு எதிராக நான் கொள்ளை நோயை அனுப்பலாம். நான் என் கடுங்கோபத்தை அதன் மீது இரத்தச் சிந்துதலுடன் ஊற்றுவேன். நான் அந்நாட்டிலுள்ள எல்லா ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 20 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.
21 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் மேலும் சொன்னார். “எனவே எருசலேமிற்கு இது எவ்வளவு கேடானது என்று எண்ணிப்பார். நான் இந்த நகரத்திற்கு எதிராக இந்நான்கு தண்டனைகளையும் அனுப்புவேன். நான் பகைவரின் படை, பசி, நோய், காட்டுமிருகங்கள் ஆகியவற்றை நகருக்கெதிராக அனுப்புவேன். நான் அந்நாட்டிலுள்ள ஜனங்களையும் விலங்குளையும் வெளியே அனுப்புவேன்! 22 ஜனங்களில் சிலர் அந்நாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் உதவிக்காகத் தம் மகன்களையும் மகள்களையும் உன்னிடம் அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் உண்மையில் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நீ அறிவாய். நான் எருசலேமிற்குக் கொடுத்த துன்பங்கள் எல்லாம் பரவாயில்லை என்று நீ உணர்வாய். 23 அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.