3
நான் சொல்லுவதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், யூதாவும் எருசலேமும் நம்பியிருக்கும் அனைத்தையும் விலக்குவார். தேவன் அங்குள்ள உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் விலக்கிவிடுவார். தேவன், அங்குள்ள தலைவர்களையும், வீரர்களையும், நீதிபதிகளையும், தீர்க்கதரிசிகளையும், மந்திரவாதிகளையும், மூப்பர்களையும் விலக்கிவிடுவார். தேவன், அங்குள்ள படைத் தலைவர்களையும் ஆட்சித் தலைவர்களையும், திறமையுள்ள ஆலோசகர்களையும், மந்திரம் செய்கிற புத்திசாலிகளையும் வருங்காலம்பற்றிக் கூறுபவர்களையும் விலக்கிவிடுவார்.
தேவன் கூறுகிறார், “இளஞ்சிறுவர்கள் உங்கள் தலைவர்களாகும்படி செய்வேன். ஒவ்வொருவனும் இன்னொருவனுக்கு எதிராவான். இளைஞர்கள் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள். பொது ஜனங்கள் முக்கியமான ஜனங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்”. அப்போது, ஒருவன் தன் சொந்த குடும்பத்திலுள்ள சகோதரனைப் பிடிப்பான். அவன் தன் சகோதரனிடம், “உன்னிடம் மேலாடை உள்ளது. எனவே, நீதான் எங்களது தலைவர், நீயே இந்த எல்லா சீர்கேட்டுக்கும், இக்கட்டுக்கும் மேலான தலைவனாக இரு” என்பான்.
ஆனால் சகோதரனோ: “என்னால் உனக்கு உதவ முடியாது. எனது வீட்டில் போதுமான அளவு உணவும் உடையும் இல்லை. நான் உங்கள் தலைவனாக முடியாது” என்பான்.
எருசலேம் விழுந்து தீமைசெய்ததால் இவ்வாறு நடைபெறும். யூதா விழுந்துவிட்டது. அது தேவனைப் பின்பற்றுவதை விட்டுவிட்டது. அவர்கள் சொல்லுகிறவையும், செய்கிறவையும் கர்த்தருக்கு எதிரானவை. கர்த்தருடைய மகிமையான கண்கள் இவை அனைத்தையும் காண்கின்றது.
தாங்கள் குற்றவாளிகள் என்றும் தாங்கள் செய்வது தவறு என்றும், அவர்களின் முகங்கள் காட்டும். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பெருமை அடைகிறார்கள். அவர்கள் சோதோம் நகர ஜனங்களைப்போன்று தங்கள் பாவங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது அவர்களுக்கு மிகக் கேடுதரும். அவர்கள் தமக்கே பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
10 நல்லவர்களுக்கு நன்மை ஏற்படும் என்று சொல்லுங்கள். அவர்கள் தாங்கள் செய்யும் நன்மைகளுக்குப் பரிசுபெறுவார்கள். 11 ஆனால் தீமை செய்பவர்களுக்குத் கேடு ஏற்படும். அவர்களுக்குப் பெரும் தொந்தரவுகள் ஏற்படும். அவர்கள் செய்த தீமைகளுக்குத் தண்டனை பெறுவார்கள். 12 என் ஜனங்களைச் சிறுபிள்ளைகள் தோற்கடிப்பார்கள். அவர்களைப் பெண்கள் ஆளுவார்கள். உங்கள் வாழிகாட்டிகள் தவறான வழியைக் காட்டிவிட்டார்கள். அவர்கள் நல்லவழியில் இருந்து திருப்பி விட்டுவிட்டார்கள்.
அவரது ஜனங்களைப் பற்றிய தேவனுடைய முடிவு
13 ஜனங்களை நியாயம்தீர்க்க கர்த்தர் எழுந்து நிற்பார். 14 கர்த்தர் தலைவர்களையும் மூப்பர்களையும் அவர்களின் செயல்களுக்காக நியாயம் தீர்ப்பார்.
கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் யூதாவாகிய இந்தத் திராட்சைத் தோட்டத்தை எரித்துப் போட்டீர்கள். ஏழைகளின் பொருட்களை எடுத்துக்கொண்டீர்கள். அவை உங்கள் வீடுகளில் இருக்கின்றன. 15 என் ஜனங்களைத் துன்புறுத்தும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? ஏழைகளின் முகங்களைப் புழுதிக்குள் தள்ளும் உரிமையை உங்களுக்கு அளித்தது யார்?” என்னிடம், எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
16 கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் தூக்கிய வண்ணம் நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்” என்றார்.
17 சீயோனிலுள்ள பெண்களின் உச்சந்தலையை என் ஆண்டவர் புண்ணாக்குவார். அவர்களின் முடிகளெல்லாம் உதிர்ந்து மொட்டையாகும்படிச் செய்வார். 18 அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களைக் கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார். 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும், 20 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துப்போடுவார்.
24 இப்பொழுது அப்பெண்களிடம் சுகந்த நறு மணம் வீசுகிறது. ஆனால் அப்பொழுது அவர்களிடம் துர்மணமும் அழுகியவாசமும் வீசும். இப்பொழுது அவர்கள் கச்சைகளை அணிந்திருக்கின்றனர். ஆனால் அப்போது வெறும் கயிறுகளைக் கட்டியிருப்பார்கள். இப்பொழுது அவர்கள் தலை மயிரை அலங்காரமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அப்போது மொட்டையாக இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் ஆடம்பரமான ஆடைகளை அணிந்துள்ளனர். ஆனால் அப்பொழுது, துக்கத்துக்குரிய ஆடைகளையே அணிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்களின் முகங்களில் அழகான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அப்பொழுது அவர்களின் முகத்தில் கருகிய தீ வடு போடப்படும்.
25 அப்போது, உங்கள் ஆட்கள் வாளால் கொல்லப்படுவார்கள். உங்கள் வீரர்கள் போரில் மரிப்பார்கள். 26 நகர வாசல்களின் சந்திகளில் அழுகை ஒலியும், துக்கமும் நிறைந்திருக்கும். எருசலேமோ, கள்ளர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் அனைத்தையும் இழந்துவிட்ட பெண்ணைப்போன்று இருப்பாள். அவள் தரையில் அமர்ந்து அழுவாள்.