எரேமியா சிறையில் போடப்படுகிறான்
37
நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசன். நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் மகன் கோனியாவின் இடத்தில் சிதேக்கியாவை யூதாவின் அரசனாக நியமித்தான். சிதேக்கியா யோசியா அரசனின் மகன். ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.
சிதேக்கியா அரசன், யூகால் என்ற பெயருடையவனையும் ஆசாரியன் செப்பனியாவையும் ஒரு செய்தியுடன் எரேமியாவிடம் அனுப்பினான். யூகால் செலேமியாவின் மகன். ஆசாரியன் செப்பனியா, மாசெயாவின் மகன். அவர்கள் எரேமியாவிற்குக் கொண்டுவந்த செய்தி: “எரேமியா, எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்.”
(அந்நேரத்தில், எரேமியாவைச் சிறையில் போட்டிருக்கவில்லை. எனவே அவன் விரும்பிய இடத்துக்குப் போகச் சுதந்திரம் உடையவனாக இருந்தான். அதே நேரத்தில் பார்வோனின் படையானது எகிப்திலிருந்து யூதாவிற்குப் புறப்பட்டது. எருசலேமைச் சுற்றி அதைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியாவின் படையானது முற்றுகையிட்டது. பிறகு, அவர்கள் எகிப்திலிருந்து படை புறப்பட்டு வருவதாக கேள்விப்பட்டனர். எனவே, பாபிலோனியப் படை எருசலேமைவிட்டுப் போய் எகிப்திலிருந்து வந்த படையோடு சண்டையிடப் போனது.)
தீர்க்கதரிசி எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. “இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது: ‘யூகாலே, செப்பனியா, யூதாவின் அரசனான சிதேக்கியா என்னிடம் சில கேள்விகள் கேட்க உன்னை அனுப்பியதை நான் அறிவேன். அரசன் சிதேக்கியாவிடம் இதைக் கூறு. பாபிலோனியன் படைக்கு எதிராக உனக்கு உதவ பார்வோனின் படை எகிப்திலிருந்து வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பார்வோனின் படை திரும்பிப் போகும். அதற்குப் பிறகு பாபிலோனின் படை இங்கே திரும்பி வரும். அவர்கள் எருசலேமைத் தாக்குவார்கள். பிறகு பாபிலோனிலிருந்து வந்தப் படை எருசலேமைப் பிடித்து நெருப்பிடுவார்கள்.’ இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேம் ஜனங்களே உங்களை முட்டாள்களாக்காதீர்கள். நீங்கள் உங்களுக்குள் “பாபிலோனின் படை உறுதியாக நம்மைத் தனியேவிடும்” என்று சொல்ல வேண்டாம். அவர்கள் வேறிடத்திற்கு போகமாட்டார்கள். 10 எருசலேம் ஜனங்களே உங்களைத் தாக்கும் பாபிலோனியப் படை முழுவதையும் நீங்கள் தோற்கடித்தாலும் அங்கே கூடாரத்தில் காயப்பட்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்தச் சில காயப்பட்டவர்களும்கூடத் தம் கூடாரத்தை விட்டு வெளியே வந்து எருசலேமை எரித்துப்போடுவார்கள்.’”
11 பாபிலோனியப் படை எகிப்தின் பார்வோனின் படையோடு போரிடச் சென்றபோது, 12 எரேமியா எருசலேமிலிருந்து பென்யமீன் தேசத்திற்குப் பயணம் செய்ய விரும்பினான். அங்கே அவன் தனது குடும்பத்திற்குரிய சொத்தைப் பங்கு வைப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தான். 13 ஆனால் எரேமியா எருசலேமின் பென்யமீன் வாசலுக்குப் போனபோது காவலர்களின் தலைவன் அவனைக் கைது செய்தான். தளபதியின் பெயர் யெரியா. யெரியா செலேமியாவின் மகன். செலேமியா அனானியாவின் மகன். எனவே தளபதி யெரியா எரேமியாவைக் கைது செய்தான். அவன், “எரேமியா நீ பாபிலோனியர் பக்கம் சேரும்படி விலகிக்கொண்டிருக்கிறாய்” என்று சொன்னான்.
14 எரேமியா யெரியாவிடம், “அது உண்மையன்று. பாபிலோனியரிடம் சேருவதற்காக நான் விலகிப் போகவில்லை” என்றான். ஆனால் யெரியா எரேமியா சொல்வதைக் கேட்க மறுத்தான். யெரியா எரேமியாவைக் கைது செய்து, எருசலேமில் உள்ள அரச அதிகாரிகளிடம் கொண்டு போனான். 15 அந்த அதிகாரிகள் எரேமியாவிடம் மிகவும் கோபமாக இருந்தனர். எரேமியாவை அடிக்கும்படி அவர்கள் கட்டளை கொடுத்தனர். பிறகு அவர்கள் எரேமியாவைச் சிறைக்குள்போட்டனர். சிறையானது யோனத்தான் என்ற பெயருடையவன் வீட்டில் இருந்தது. யூதாவின் அரசனுக்கு யோனத்தான் ஒரு எழுத்தாளனாக இருந்தான் யோனத்தான் வீடு சிறையாக ஆக்கப்பட்டிருந்தது. 16 அந்த ஜனங்கள் எரேமியாவை யோனத்தானின் வீட்டின் அடியிலுள்ள பள்ளத்திலே போட்டனர். அந்த அறை ஆழமான பள்ளத்திலே இருந்தது. எரேமியா அங்கே நீண்ட காலம் இருந்தான்.
17 பிறகு சிதேக்கியா அரசன் ஒரு ஆளை அனுப்பி அரசனின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான் அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.
18 எரேமியா, “ஆம். கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்திருக்கிறது. சிதேக்கியா, பாபிலோன் அரசனிடம் நீ கொடுக்கப்படுவாய்” என்று பதில் சொன்னான். பிறகு எரேமியா அரசன் சிதேக்கியாவிடம், “நான் என்ன தவறு செய்தேன்? உனக்கு எதிராக நான் என்ன குற்றம் செய்தேன்? அல்லது உனது அதிகாரிகளுக்கு அல்லது எருசலேம் ஜனங்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தேன்? என்னை எதற்காகச் சிறையிலிட்டாய்? 19 சிதேக்கியா அரசனே, உனது தீர்க்கதரிசிகள் இப்பொழுது எங்கே? அந்தத் தீர்க்கதரிசிகள் உன்னிடம் பொய்யைச் சொன்னார்கள். அவர்கள், ‘பாபிலோன் அரசன் உன்னையோ இந்த யூதா தேசத்தையோ தாக்கமாட்டான்’ என்றார்கள். 20 ஆனால், இப்பொழுது யூதாவின் அரசனே நான் சொல்வதைக் கேள். என் விண்ணப்பத்தை தயவுசெய்து கேள். இதுதான் நான் கேட்பது. என்னைத் திரும்ப எழுத்தாளனான யோனாத்தானின் வீட்டிற்கு அனுப்பவேண்டாம். நீர் என்னை அங்கு அனுப்பினால் நான் அங்கே மரிப்பேன்” என்று சொன்னான்.
21 எனவே சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே வைக்குமாறு கட்டளையிட்டான். அவனுக்குத் தெருவிலே அப்பஞ்சுடுகிறவர்களிடமிருந்து அப்பத்தை வாங்கிக் கொடுக்கச் சொன்னான். நகரத்திலே அப்பம் இருக்கும்வரை எரேமியாவிற்கு வாங்கிக் கொடுக்கப்பட்டது. எனவே அப்படியே எரேமியா காவற் சாலையின் முற்றத்திலே இருந்தான்.