உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களுக்கான விதிகள்
15
1 பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து,
2 “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும்.
3 இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.
4 “உடற்கழிவு ஏற்பட்டவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும். அவன் எதன் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
5 அவனது படுக்கையைத் தொடுகிறவன் தனது ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டுள்ளவனாக இருப்பான்.
6 உடற்கழிவு ஏற்பட்டவன் உட்காருகிற இடத்தில் உட்காருகிறவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை இவனும் தீட்டு உள்ளவனாக இருப்பான்.
7 உடற்கழிவு ஏற்படுகிறவனைத் தொடுபவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை இவனுக்கும் தீட்டு இருக்கும்.
8 உடற்கழிவு உள்ளவனின் எச்சில் மேலேபட்டாலும் ஒருவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை அவனுக்குத் தீட்டு இருக்கும்.
9 இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும்.
10 இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான்.
11 சிற்சில இடங்களில் உடற்கழிவு உள்ளவன் தண்ணீரில் தன் கைகளைக் கழுவாமலே அடுத்தவனைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டாக இருப்பான்.
12 “உடற்கழிவு ஏற்பட்டவன் ஏதேனும் மண் பாண்டத்தைத் தொட்டால் அம்மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். மரத்தாலான பாத்திரத்தை அவன் தொடநேர்ந்தால், அதைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
13 “உடற்கழிவு உள்ளவன் அது நீங்கி சுத்தமானதும் அதற்குச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்காக ஏழு நாட்கள் காத்திருந்து, தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் சுத்தமாவான்.
14 எட்டாவது நாள் அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவற்றைக் கர்த்தருக்கு முன் கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.
15 அவற்றுள் ஒன்று பாவப்பரிகார பலியாகவும் இன்னொன்று தகன பலியாகவும் ஆசாரியன் கர்த்தருக்கு செலுத்துவான். இம்முறையில் ஆசாரியன் கர்த்தருக்கு முன் அவனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.
16 “ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
17 தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும்.
18 விந்து கழிந்தவனோடு ஒரு பெண்படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலை வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும்.
21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான்.
22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.
24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.
25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும்.
26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும்.
27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான்.
28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள்.
29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.
30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.
32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும்,
33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.