குற்ற பரிகார பலிகள்
7
1 “குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது.
2 தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே ஆசாரியன் குற்ற பரிகார பலியையும் கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி ஆசாரியன் தெளிக்க வேண்டும்.
3 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் கொழுப்பு முழுவதையும், செலுத்தவேண்டும். அவன் அதன் வாலையும் குடல்களை மூடியிருக்கிற கொழுப்பையும் அளிக்க வேண்டும்.
4 ஆசாரியன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பையும் எடுத்து அளிக்க வேண்டும். மேலும் கல்லீரலின் கொழுப்பு பகுதியையும் சிறு நீரகங்களோடு எடுத்து செலுத்த வேண்டும்.
5 இவற்றைப் பலி பீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்க வேண்டும். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது குற்ற பரிகார பலியாகும்.
6 “இக்குற்ற பரிகார பலியை ஆசாரியனின் குடும்பத்தில் உள்ள எந்த ஆண் மகனாயினும் உண்ணலாம். இது மிகவும் பரிசுத்தமானது. எனவே அது ஒரு பரிசுத்தமான இடத்தில் உண்ணப்பட வேண்டும்.
7 இக்குற்ற பரிகார பலியானது பாவப் பரிகார பலியைப் போன்றதாகும். இரண்டுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளே உள்ளன. எனவே பலியைக் கொடுத்த ஆசாரியனே அப்பலியின் இறைச்சியைப் பெறுவான்.
8 ஒருவனது தகன பலியைச் செலுத்திய ஆசாரியன் தான் செலுத்திய பலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளலாம்.
9 எல்லா தானியக் காணிக்கைகளும் அதை முன்னின்று வழங்கும் ஆசாரியனுக்கே உரியதாகும். அடுப்பில் சமைக்கப்பட்டதாகவோ, அல்லது சட்டியிலும், தட்டையான சட்டியிலும் சமைக்கப்பட்டதாகவோ இருக்கும் காணிக்கையானது ஆசாரியனுக்கே சேரும்.
10 ஆரோனின் மகன்களுக்கு தானியக் காணிக்கைப் பொருள்கள் சேரும். அவை உலர்ந்ததா அல்லது எண்ணெயில் கலக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரோனின் மகன்கள் அதனைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
சமாதானப் பலிகள்
11 “கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானப் பலியின் சட்டங்கள் கீழ்க்கண்டவையாகும்.
12 தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக ஒருவன் சமாதானப் பலியைக் கொண்டு வரலாம். அப்போது அவன் எண்ணெயிலே கலந்து பிசைந்த புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மிருதுவான மாவால் ஆன அப்பங்களையும் படைக்க வேண்டும்.
13 ஒருவன் தேவனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிற முறையே சமாதானப் பலியாகும். அந்தக் காணிக்கையோடு அவன் புளித்த மாவினாலான அப்பங்களையும் செலுத்த வேண்டும்.
14 சமாதானப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியனுக்கு இந்த அப்பங்களில் ஒன்று உரியதாகும்.
15 சமாதானப் பலியின் இறைச்சியை வழங்கும் அதே நாளிலேயே உண்ண வேண்டும். தேவனுக்கு தன் நன்றியைச் செலுத்தும் வகையில் ஒருவன் சமாதானப் பலியை வழங்குகிறான். இறைச்சியில் சிறிதளவுகூட அடுத்த நாள் மீந்திருக்கக் கூடாது.
16 “தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் ஒருவன் சமாதானப் பலியைக் கொண்டுவரலாம், அல்லது விசேஷ வாக்குறுதியை ஒருவன் தேவனுக்கு செய்திருக்கலாம். இது உண்மையானால், பின் அந்த பலியின் இறைச்சியை அவன் செலுத்திய அன்றே சாப்பிட வேண்டும். அதில் மீதியாக இருந்தால் அதனை அடுத்த நாளில் சாப்பிட வேண்டும்.
17 ஆனால் பலியின் இறைச்சியானது மூன்றாம் நாளும் மிஞ்சுமானால், அதனை நெருப்பிலே சுட்டு எரித்துவிட வேண்டும்.
18 எவனாவது மூன்றாம் நாளிலும் மிச்சமான சமாதானப் பலியின் இறைச்சியை உண்ணுவானேயானால் அவனைப்பற்றி கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் அந்த பலியை அவனுக்குரியதாக ஏற்றுக்கொள்ளமாட்டார். அந்த பலி அசுத்தமானதாகும். அத்தகைய இறைச்சியை எவனாவது தின்றால் அதற்குரிய பாவத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்.
19 “அந்த இறைச்சியானது தீட்டான எப்பொருளின் மீதாவது பட்டால் அதனையும் ஜனங்கள் உண்ணக் கூடாது. அதனை நெருப்பில் எரித்துவிட வேண்டும். சமாதான பலிக்குரிய இறைச்சியைச் சுத்தமுள்ள எவனும் உண்ணலாம்.
20 ஆனால் ஒருவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும் சமாதான பலிக்குரிய இறைச்சியை உண்டுவிட்டால் அவன் அந்த ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
21 “ஒருவன் தீட்டான ஒன்றைத் தொட்டுவிடலாம். அது மனிதர்களாலோ, தீட்டான மிருகங்களாலோ அல்லது தீட்டான வெறுக்கத்தக்கப் பொருளாலோ தீட்டாகியிருக்கலாம். ஒருவன் அதனைத் தொட்டதால் தீட்டாகிவிடுகிறான். அவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும், சமாதானப் பலிக்குரிய இறைச்சியை உண்டால், பிறகு மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று சொன்னார்.
22 மேலும் கர்த்தர் மோசேயிடம்,
23 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் பசு, வெள்ளாடு, ஆடு ஆகியற்றின் கொழுப்பை உண்ணக் கூடாது என்று கூறுங்கள்.
24 தானாக இறந்த எந்த மிருகத்தின் கொழுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது மற்ற மிருகங்களால் கொல்லப்பட்ட மிருகக் கொழுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஒருபோதும் நீங்கள் உண்ணக் கூடாது.
25 எவனாவது கர்த்தருக்கு நெருப்பில் எரித்து அளித்த பலியின் இறைச்சியை உண்பானேயானால் அவன் தன் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
26 “நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் அங்கே எவரும் பறவைகளின் இரத்தத்தையோ அல்லது மிருகங்களின் இரத்தத்தையோ உண்ணக் கூடாது.
27 எவனாவது இரத்தத்தை உண்டால் அவன் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
அசைவாட்டும் பலிக்கான விதிகள்
28 மேலும் கர்த்தர் மோசேயிடம்,
29 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுங்கள்: ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைக் கொண்டு வரும்போது அதன் ஒரு பகுதியை கர்த்தருக்கு வழங்க வேண்டும்.
30 அப்பகுதி நெருப்பில் எரிக்கப்பட வேண்டும். அவன் தன் கைகளால் அந்த பலிகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். அவன் ஆசாரியனிடம் அம்மிருகத்தின் மார்புக்கண்டத்தையும், கொழுப்பையும் தர வேண்டும். அந்த மார்புக்கண்டத்தைக் கர்த்தருக்கு முன்னால் மேலே தூக்கிப்பிடிக்க வேண்டும். இதுவே அசைவாட்டும் பலியாகும்.
31 பிறகு ஆசாரியன் அந்தக் கொழுப்பை பலி பீடத்தில் எரிக்க வேண்டும். ஆனால் மார்புக்கண்டம் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியதாகும்.
32 நீங்கள் அம்மிருகத்தின் வலது தொடையை சமாதானப் பலியிலிருந்து எடுத்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.
33 சமாதானப் பலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் குமாரனாகிய ஆசாரியனுக்கு வலது முன்னந் தொடை பங்காகச் சேரும்.
34 (கர்த்தராகிய) நான் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து சமாதானப் பலிகளிலிருந்து வலது தொடையையும், அசைவாட்டும் பலியின் மார்க்கண்டத்தையும் எடுத்துக்கொள்வேன். நான் அவற்றை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கிறேன். இஸ்ரவேலின் ஜனங்கள் இந்த விதிக்கு என்றென்றும் கீழ்ப்படிய வேண்டும்” என்று கூறினார்.
35 எரிக்கப்பட்ட காணிக்கை மூலமாகக் கிடைத்த இப்பாகங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கப்படும். ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுமளவும் அவர்கள் தங்களுக்குரிய பலிகளின் பங்கைப் பெறுவார்கள்.
36 அவர்களை ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்த காலத்திலேயே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம் ஆசாரியர்களுக்குரிய பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். அந்த ஜனங்கள் அப்பங்கை அவர்களுக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும்.
37 இவையே தகன பலிகளுக்கும், தானிய பலிகளுக்கும், குற்றபரிகார பலிகளுக்கும், பாவப் பரிகார பலிகளுக்கும், சமாதானப் பலிகளுக்கும், ஆசாரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உரிய சட்டங்களாகும்.
38 கர்த்தர் இச்சட்டங்களை மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்தார். கர்த்தர் அச்சட்டங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பலிகளை சீனாய் வனாந்தரத்துக்கே கொண்டு வந்து செலுத்தும்படி கட்டளையிட்ட அந்த நாளிலேயே கொடுத்தார்.