மேலும் பிரச்சனைகள்
6
1 பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை.
2 எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர்.
3 எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.
4 சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன்.
5 பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது.
6 அக்கடிதத்தில்,
“ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் அரசனுக்கு எதிராகத் திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய அரசன் ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
7 ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது.
“நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா அரசனும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது.
8 எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன்.
9 எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன்.
10 ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.
11 ஆனால் நான் செமாயாவிடம், “என்னைப் போன்ற சாதாரண மனிதன் ஓடலாமா? என்னைப் போன்ற சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பரிசுத்தமான இடத்திற்கு ஓட முடியாது என்று நீ அறிவாய்.நான் போகமாட்டேன்!” என்று சொன்னேன்.
12 செமாயாவை தேவன் அனுப்பியிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். அவன் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவனுக்குத் தொபியாவும் சன்பல்லாத்தும் சம்பளம் கொடுக்கிறார்கள்.
13 செமாயா, என்னைப் பயங்காட்டி அச்சமடைய செய்வதற்குக் கூலி பெற்றிருக்கிறான். நான் ஆலயத்தின் அந்தப் பாகத்திற்குப் போவதால் ஏற்படும் பாவத்தை செய்ய அவர்கள் இத்தகைய தீயகாரியங்களை எனக்கு எதிராக திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். பிறகு எனது பகைவர்களுக்கு என்னை நிந்திக்க ஒரு காரணம் கிடைத்துவிடும். அதன் மூலம் எனக்குக் கெட்ட பெயரைத் தருவார்கள்.
14 தேவனே தயவுசெய்து தொபியாவையும் சன்பல்லாத்தையும் அவர்கள் செய்துள்ள தீயவற்றையும் நினைவுக்கொள்ளும். பெண் தீர்க்கதரிசியான நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும் என்னைப் பயங்காட்ட முயன்றதை நினைவுக்கொள்ளும்.
சுவர் முடிக்கப்படுகிறது
15 எனவே, எருசலேம் சுவர் எலூல் மாதத்தின் 25வது நாளன்று கட்டி முடிக்கப்பட்டது. சுவரைக் கட்டிமுடிக்க 52 நாட்கள் ஆயிற்று.
16 பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.
17 சுவர் வேலை முடிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில், யூதாவில் உள்ள பணக்கார ஜனங்கள் தொபியாவிற்குப் பல கடிதங்களை அனுப்பினர். தொபியாவும் அவற்றுக்குப் பதில் அனுப்பினான்.
18 அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் மகன். தொபியாவின் மகனான யோகனான் மெசுல்லாமின் மகளை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் மகனாக இருந்தான்.
19 கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் தொபியாவிற்கு ஒரு சிறப்பான வாக்குறுதியைச் செய்துக் கொடுத்திருந்தனர். எனவே அந்த ஜனங்கள் என்னிடம் தொபியா எவ்வளவு நல்லவன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நான் செய்துக்கொண்டிருந்ததையும் அவர்கள் தொபியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொபியா என்னைப் பயங்காட்ட கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தான்.