ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் வேலை
18
1 கர்த்தர் ஆரோனிடம், “நீயும், உனது மகன்களும், உன் தந்தையின் குடும்பத்தில் உள்ளவர்களுமே பரிசுத்தமான இடத்தில் ஏற்படும் தவறுகளுக்குப் பொறுப்பாவீர்கள். ஆசாரியர்களுக்கு எதிராக நடை பெறும் தவறுகளுக்கும் நீயும், உனது மகன்களும் பொறுப்பாவீர்கள்.
2 உனது கோத்திரத்தில் உள்ள மற்ற வேவியர்களையும் உங்களோடுச் சேர்த்துக்கொள். ஆசரிப்புக் கூடாரத்தில் நீங்களும் உங்கள் மகன்களும் செய்யும் வேலைகளுக்கு அவர்கள் உதவுவார்கள்.
3 லேவியரின் குடும்பத்தில் உள்ள அனைத்து ஜனங்களும் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருப்பார்கள். கூடாரத்திற்குள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமான இடத்தின் அருகிலோ, பலிபீடத்தின் அருகிலோ போகக்கூடாது. அவ்வாறு போனால் மரித்துப்போவார்கள். நீங்களும் மரித்துப்போவீர்கள்.
4 அவர்கள் உங்களோடு சேர்ந்து வேலை செய்வார்கள். அவர்களே ஆசரிப்புக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்புள்ளவர்கள். கூடாரத்திற்குள் நடை பெற வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் அருகில் எவரும் வரக்கூடாது.
5 “இஸ்ரவேல் ஜனங்கள் மீது திரும்பவும் கோபாக்கினை விழாதபடி நீங்கள் பரிசுத்த இடத்தையும் பலிபீடத்தையும் காக்கிற பொறுப்புடையவர்கள். நான் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்கள் மீது கோபம்கொள்ள விரும்பவில்லை.
6 அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் நானே லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் உங்களுக்கு ஒரு பரிசைப் போன்றவர்கள். நான், அவர்களை உங்களுக்காகக் கர்த்தருக்குச் சேவை செய்யவும், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சில வேலைகளைச் செய்யவும் தந்தேன்.
7 ஆனால் ஆரோனே! நீயும் உன் மகன்களும் மட்டும் ஆசாரியர்களாகப் பணிபுரிய வேண்டும். பலிபீடத்தின் அருகில் செல்லும் தகுதியுடையவர்கள் நீங்கள் மட்டுமே. மகாபரிசுத்த இடத்திற்குள் திரைக்குப் பின்னால் செல்லும் தகுதி உடையவர்களும் நீங்கள் மட்டுமே. ஆசாரியர்களாகப் பணிபுரிவதை உங்களுக்கு ஒரு பரிசாகக் கொடுத்திருக்கிறேன். வேறு எவராவது எனது பரிசுத்த இடத்திற்கு அருகில் வந்தால் கொல்லப்படுவார்கள்” என்று கூறினார்.
8 பிறகு கர்த்தர் ஆரோனிடம், “ஜனங்கள் எனக்குத் தருகிற எல்லா அன்பளிப்புகளுக்கும் உங்களையே பொறுப்பாளர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்கள் கொடுக்கும் அனைத்து பரிசுத்தமான அன்பளிப்புகளையும் நான் உங்களுக்குத் தருகிறேன். அவற்றை நீயும் உனது மகன்களும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அவை எப்பொழுதும் உங்களுக்கு உரியது.
9 ஜனங்கள் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும், பாவப்பரிகார பலிகளையும், குற்றபரிகாரப் பலிகளையும் கொண்டு வருவார்கள். அவை மிகவும் பரிசுத்தமானவை. தகனம் செய்யப்படாத பலிகளெல்லாம் உங்கள் பங்காகக் கிடைக்கும். அவை உனக்கும் உன் மகன்களுக்கும் உரியதாகும்.
10 அவற்றை மிகப் பரிசுத்தமான இடத்தில் வைத்துதான் உண்ண வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் உண்ணலாம். ஆனால் அவை பரிசுத்தமானவை என்பதை நீங்கள் மறக்கக் கூடாது.
11 “இஸ்ரவேலர்கள் தரும் அசைவாட்டும் பலிகளும், உங்களுக்கு உரியதாகும். நான் அவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உனது மகள்களுக்கும் தருவேன். இது உனது பங்காகும். உன் குடும்பத்திலுள்ள தீட்டு இல்லாத எல்லாரும் அதனை உண்ணலாம்.
12 “அதோடு நான் உனக்கு சிறந்த ஒலிவ எண்ணெயையும், புதிய திராட்சைரசத்தையும், தானியத்தையும் தருவேன். இவை இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தராகிய எனக்குக் கொடுக்கப்பட்டவை. இவை அறுவடையின் போது, முதலில் கிடைக்கப் பெற்றவையாயிருக்கும்.
13 ஜனங்கள் அறுவடை செய்யும்போதெல்லாம் முதலில் கிடைத்ததைக் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அவற்றையெல்லாம் உனக்குத் தருவேன். உன் குடும்பத்தில் உள்ள தீட்டு இல்லாத ஒவ்வொருவரும் அவற்றை உண்ணலாம்.
14 “இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தருக்குக் கொடுக்கப்படும் அனைத்தும் உங்களுக்கு உரியதாகும்.
15 “ஒரு பெண்ணின் முதல் குழந்தையும் ஒரு மிருகத்தின் முதல் குட்டியும் கர்த்தருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த விலங்கின் முதலீற்று தீட்டுள்ளதாக இருந்தால் கொடுப்பவரே அதைத் திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும். முதலில் பிறந்த குழந்தை காணிக்கையாகக் கொடுக்கப்படும்போது அதுவும் திரும்ப வாங்கப்பட வேண்டும். அப்பொழுது அக்குழந்தை மறுபடியும் அதே குடும்பத்திற்கு உரியதாகிவிடும்.
16 அக்குழந்தை ஒரு மாத வயதுடையதாக இருந்தால், அதற்குரிய தொகையைக் கொடுக்கவேண்டும். அத்தொகை 2 அவுன்ஸ் வெள்ளியாகும். அது அதிகாரப் பூர்வமான அளவு முறையில் 5 சேக்கல் உடையதாக எடையிடப்பட வேண்டும். ஒரு சேக்கல் அதிகாரப் பூர்வமான அளவில் 20 கேராவாகும்.
17 “ஆனால் நீங்கள் முதலில் பிறந்த காளைக்கும், ஆட்டுக்கும், வெள்ளாட்டுக்கும் பணம் கொடுக்கக் கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிக்கவேண்டும். அவற்றின் கொழுப்பை எரிக்க வேண்டும். இது நெருப்பிலிடப்படும் தகனபலியாகும். இதின் மணம் கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கும்.
18 அவற்றின் இறைச்சியானது உங்களுக்கு உரியதாகும். அசை வாட்டும் பலியாகச் செலுத்தப்பட்ட மார்புக்கண்டமும், உங்களுக்கு உரியது. மற்ற பலிகளின் தொடைக்கறியும் உங்களுக்கு உரியது.
19 ஜனங்களால் கொடுக்கப்படும் பரிசுத்தமான அன்பளிப்புகளையும் கர்த்தராகிய நான் உங்களுக்குத் தருவேன். இது உங்கள் பங்காகும். நான் இவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும் தருவேன். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். இது கர்த்தரோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடைக்க முடியாது. நான் இந்த வாக்குறுதியை உனக்கும், உன் சந்ததிகளுக்கும் தந்துள்ளேன், இது மாறாததாகும்” என்று கூறினார்.
20 கர்த்தர் மேலும் ஆரோனிடம், “நீ எவ்வித நிலத்தையும் பெறமாட்டாய். மற்றவர்களுக்குச் சொந்தமான எதுவும் உனக்குச் செந்தமாவதில்லை. கர்த்தராகிய நானே உனக்கு உரியவர். இஸ்ரவேல் ஜனங்கள் நான் வாக்களித்தபடி நிலத்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் என்னை நானே உனக்கு சுதந்திரமாகத் தந்துள்ளேன்.
21 “இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை உங்களுக்குத் தருவார்கள். எனவே நான் அந்தப் பத்தில் ஒன்றை லேவியின் சந்ததியினருக்குக் கொடுக்கிறேன். ஆசாரிப்புக் கூடாரத்தில் பணிபுரியும் அவர்களுக்கு இதுவே சம்பளமாகும்.
22 ஆனால் இஸ்ரவேலரின் ஜனங்களில் மற்றவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் அருகில் சென்றால் அவர்கள் சாகடிக்கப்படுவர்!
23 ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பணியாற்றும் லேவியர்கள் இதற்கு எதிரான பாவங்களுக்குப் பொறுப்பாவார்கள். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்குரியதாகும். நான் மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நிலமானது லேவியர்களுக்கும் கிடைக்காது.
24 ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை எனக்கு தருவார்கள். நான் அதனை லேவியர்களுக்குத் தருவேன். எனவே லேவியர்கள் மற்ற இஸ்ரவேலரைப் போல நிலம் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார்.
25 கர்த்தர் மோசேயிடம்,
26 “லேவியர்களிடம் இவற்றை கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குத் தருவார்கள். அவை லேவியர்களுக்கு உரியதாகும். ஆனால், நீங்கள் அதில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.
27 அறுவடையானதும் தானியத்தையும், திராட்சை ரசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்த வேண்டும்.
28 இவ்வாறு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் செய்வது போலவே, நீங்களும் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தவேண்டும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கு உங்களுக்குரியது. உங்களுக்குக் கொடுக்கப்படும் பத்தில் ஒரு பங்கில், கர்த்தருக்கு ஒரு பங்கைத் தரவேண்டும். பிறகு ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அதில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கவேண்டும்.
29 இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தரும்போது நீங்கள் அவற்றில் சிறந்த பரிசுத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவற்றையே நீங்கள் உங்கள் பாகத்தில் பத்தில் ஒரு பங்காகக் கர்த்தருக்குத் தரவேண்டும்.
30 “மோசே, லேவியர்களிடம் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அறுவடையின் போது தானியத்திலும் திராட்சைரசத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தருவார்கள். நீங்கள் அவற்றில் சிறந்த பங்கைக் கர்த்தருக்குத் தரவேண்டும்.
31 மீதமுள்ளவற்றை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உண்ணலாம். நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் செய்யும் வேலைகளுக்கு இதுவே கூலியாகும்.
32 நீங்கள் எப்போதும் உங்கள் பங்கிலுள்ள சிறந்த பகுதியை மட்டும் கர்த்தருக்குக் கொடுத்து வந்தால் பிறகு எப்போதும் நீங்கள் குற்றவாளியாகமாட்டீர்கள். அந்த அன்பளிப்புகளை எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களால் தரப்பட்டப் பரிசுத்த காணிக்கைகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், அப்போது நீங்கள் அழியமாட்டீர்கள்” என்று கூறினார்.