110
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
பிற நாடுகளிலும்நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார்.
தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார்.
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!