செப்பனியா
1
கர்த்தர் செப்பனியாவுக்குக் கொடுத்தச் செய்தி இது. செப்பனியா இச்செய்தியை யூதாவின் அரசனான ஆமோனின் மகனான யோசியா ஆண்டபோது பெற்றான். செப்பனியா கூஷின் மகன். கூஷ் கெதலியாவின் மகன். கெதலியா ஆமரியாவின் மகன். ஆமரியா எஸ்கியாவின் மகன்.
ஜனங்ளைத் தீர்ப்பளிக்கும் கர்த்தருடைய நாள்
கர்த்தர் கூறுகிறார், “நான் பூமியில் உள்ள எல்லாவற்றையும் அழிப்பேன். நான் அனைத்து ஜனங்களையும், அனைத்து விலங்குகளையும் அழிப்பேன். வானில் உள்ள பறவைகளையும், கடலிலுள்ள மீன்களையும் அழிப்பேன். நான் தீய ஜனங்களையும். அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் அனைத்தையும் அழிப்பேன். நான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அகற்றுவேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
கர்த்தர், “நான் யூதாவையும், எருசலேமில் வாழ்கிற ஜனங்களையும் தண்டிப்பேன். நான் அந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் அகற்றுவேன். நான் பாகால் வழிபாட்டின் இறுதி அடையாளங்களை அகற்றுவேன். நான் ஆசாரியர்களையும் அகற்றுவேன். நான் நட்சத்திரங்களை வழிபடச் செல்ல கூரையின் மேல் செல்லும் ஜனங்களை அகற்றுவேன். ஜனங்கள் அப்பொய் ஆசாரியர்களை மறப்பார்கள். சில ஜனங்கள் என்னை ஆராதிப்பதாகச் சொல்கிறார்கள். அந்த ஜனங்கள் என்னை வழிபடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் பொய்த் தெய்வமான மல்காமை வழிபடுகின்றனர். எனவே, நான் அந்த ஜனங்களை அந்த இடத்திலிருந்து நீக்குவேன். சில ஜனங்கள் கர்த்தரிடமிருந்து விலகினார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டனர். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதை நிறுத்தினார்கள். எனவே, நான் அந்த இடத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவேன்” என்றார்
எனது கர்த்தராகிய ஆண்டவர் முன்னால் அமைதியாயிரு. ஏனென்றால், கர்த்தருடைய நீயாயத்தீர்ப்பின் நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. கர்த்தர் பலியைத் தயாரித்திருக்கிறார். அவர் தனது அழைக்கப்பட்ட விருந்தினர்களை ஆயத்தப்படும்படிச் சொல்லியிருக்கிறார்.
கர்த்தர், “கர்த்தருடைய பலிநாளில், நான் அரசனின் மகன்களையும் மற்ற தலைவர்களையும் தண்டிப்பேன். நான் வேறு நாடுகளிலிருந்து வந்த துணிகளை அணிந்த ஜனங்களைத் தண்டிப்பேன். அந்த நேரத்தில், நான் வாசற்படியைத் தாண்டிய ஜனங்களையும் தண்டிப்பேன். நான் தம் அதிகாரியின் வீடுகளைப் பொய்களாலும், வன்முறையாலும் நிரப்புகிற ஜனங்களைத் தண்டிப்பேன்” என்றார்.
10 கர்த்தரும், “அந்த வேளையில் எருசலேமில் மீன்வாசல் அருகே உள்ள ஜனங்கள் என்னிடம் உதவிக்கு அழைப்பார்கள். பட்டணத்தின் மற்றப் பகுதிகளில் உள்ள ஜனங்கள் அழுவார்கள். நகரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பொருட்கள் அழிக்கப்படுகிற சத்தங்களை ஜனங்கள் கேட்பார்கள். 11 பட்டணத்தின் தாழ்வான பகுதிகளில் வாழும் ஜனங்கள் அழுவார்கள். ஏனென்றால் எல்லா வியாபாரிகளும், பணக்காரர்களும் அழிக்கப்படுவார்கள்.
12 “அந்த வேளையில், நான் ஒரு விளக்கை எடுத்து எருசலேம் முழுவதும் தேடுவேன். நான் தம் வழியில் செல்வதில் திருப்தி காணும் ஜனங்களைக் கண்டு கொள்வேன். அந்த ஜனங்கள், ‘கர்த்தர் எதுவும் செய்வதிலை. அவர் உதவுவதில்லை! அவர் காயப்படுத்துவதில்லை!’ நான் அவர்களைக் கண்டு பிடித்து தண்டிப்பேன் என்று கூறுகின்றார். 13 பிறகு மற்ற ஜனங்கள் அவர்களின் செல்வத்தை எடுத்துக்கொண்டு வீடுகளை அழிப்பார்கள். அந்த நேரத்தில், வீடுகட்டிய ஜனங்கள் அதில் வாழமாட்டார்கள். திராட்சை கொடிகளை நட்டவர்கள் அதன் ரசத்தைக் குடிக்கமாட்டார்கள். மற்ற ஜனங்கள் அவற்றைப் பெறுவார்கள்”.
14 கர்த்தருடைய நியாயதீர்ப்பின் நாள் விரைவில் வரும். அந்த நாள் அருகாமையில் உள்ளது. விரைவில் வரும். கர்த்தருடைய நியாத்தீர்ப்பின் நாளில் ஜனங்கள் சோகக் குரல்களைப் கேட்பார்கள். வலிமையான வீரர்கள் கூட அழுவார்கள். 15 தேவன் அந்நேரத்தில் தன் கோபத்தைக் காட்டுவார். அது பயங்கரமான துன்பங்களுக்குரிய நேரமாக இருக்கும். இது அழிவுக்கான நேரம்தான். இது இருண்ட கருத்த மேகமும், புயலுமுள்ள நாளாக இருக்கும். 16 இது போருக்குரிய காலத்தைப் போன்றிருக்கும். ஜனங்கள் எக்காளம் மற்றும் பூரிகை சத்தங்களை கோபுரங்கள் மற்றும் பாதுகாப்புக்குரிய நகரங்களிலிருந்தும் கேட்பார்கள்.
17 கர்த்தர், “நான் ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமானதாகச் செய்வேன். ஜனங்கள் குருடர்களைப்போன்று எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஏராளமான ஜனங்கள் கொல்லப்படுவார்கள். அவர்களின் இரத்தம் தரையில் சிந்தும். அவர்களின் மரித்த உடல்கள் தரையில் சாணத்தைப் போன்றுக் கிடக்கும். 18 அவர்களது பொன்னும், வெள்ளியும் அவர்களுக்கு உதவாது. அந்த நேரத்தில் கர்த்தர் எரிச்சலும், கோபமும் கொள்வார். கர்த்தர் உலகம் முழுவதையும் அழிப்பார். கர்த்தர் உலகில் உள்ள ஒவ்வொன்றையும் முழுவதுமாக அழிப்பார்” என்றார்.