செல்வம் மகிழ்ச்சியைக் கொண்டு வராது
6
1 வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது.
2 ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.
3 ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும்.
4 ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும்.
5 அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும்.
6 அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.
7 ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை.
8 இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது.
9 நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.
10-11 ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.
12 பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில், எது சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனது வாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.