தகனபலிகளுக்குரிய பலிபீடம்
27
கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும், 3 முழ உயரமும் இருக்கட்டும். பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளைப் பொருத்து. இப்படி பலிபீடமும், கொம்புகளும் ஒரே துண்டாக இருக்கும். பலி பீடத்தை வெண்கலத்தால் மூட வேண்டும்.
“பலிபீடத்தில் பயன்படுத்தும் பாத்திரங்களும், கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையாக இருக்கட்டும். பானைகள், அகப்பைகள், கிண்ணங்கள், முள் கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகியவற்றைச் செய். பலிபீடத்தின் சாம்பலை அகற்றுவதற்காக இவை பயன்படும். பலபீடத்திற்கு வலை போன்ற ஒரு சல்லடை செய்யவேண்டும். சல்லடையின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையங்களை உண்டாக்கு. பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.
“பலிபீடத்திற்கான தூண்களை சீத்திம் மரத்தால் செய்து அதை வெண்கலத்தால் மூட வேண்டும். பலிபீடத்தின் இருபக்கங்களிலும் வளையங்களின் வழியே தண்டுகளைச் செலுத்து. பலிபீடத்தைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்து. பல கைகளால் செய்யப்பட்ட பக்கங்களை உடைய உட்குழியுள்ள பெட்டியைப்போல பலிபீடத்தைச் செய்ய வேண்டும். நான் மலையில் உனக்குக் காண்பித்தபடியே பலி பீடத்தைச் செய்யவேண்டும்.
பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப்பிரகாரம்
“பரிசுத்த கூடாரத்திற்கு ஒரு வெளிப்பிரகாரம் அமைப்பாயாக. அது 100 முழ நீளமான திரைகளால் தெற்குப்புறம் மறைக்கப்படட்டும். மெல்லிய துகிலால் இத்திரைகள் அமைய வேண்டும். 10 20 வெண்கல பீடங்கள் உள்ள 20 தூண்களைப் பயன்படுத்து. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட வேண்டும். 11 வடபுறத்திலும் திரைச் சுவர் 100 முழ நீளமாக இருக்க வேண்டும். அதற்கு 20 தூண்களும், 20 வெண்கலப் பீடங்களும் இருக்கவேண்டும். தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப் படவேண்டும்.
12 “வெளிப்பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் 50 முழ நீளமுள்ள திரைச்சுவர் இருக்க வேண்டும். 10 தூண்களும், 10 பீடங்களும் இருக்க வேண்டும். 13 வெளிப்பிரகாரத்தின் கிழக்குப் புறமும் 50 முழ அகலம் இருக்க வேண்டும். 14 வெளிப்பிரகாரத்தின் நுழை வாயில் கிழக்குப் புறத்திலேயே அமையட்டும். நுழைவாயிலின் ஒருபுறம் 15 முழ நீளமான திரைகளும், 3 தூண்களும், 3 பீடங்களும் இருக்க வேண்டும். 15 அதன் மறுபுறமும் 15 முழ நீளமான திரைகளும், மூன்று தூண்களும், அவற்றிற்கு மூன்று பீடங்களும் இருக்கட்டும்.
16 “வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு 20 முழ நீளமான திரை இருக்கவேண்டும். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும் ஆகிய துணிகளால் திரைகளையும், அதில் சித்திர வேலைப்பாடுகளையும் செய். நான்கு பீடங்கள் உள்ள நான்கு தூண்கள் திரைக்கென இருக்கட்டும். 17 வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள அனைத்துத் தூண்களும் வெள்ளி பூண்களும், வெள்ளிக் கொக்கிகளும், வெண்கலப் பீடங்களும் கொண்டதாக இருக்கவேண்டும். 18 100 முழ நீளமும் 50 முழ அகலமும் கொண்டதாக வெளிப்பிரகாரம் இருக்கவேண்டும். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலு முள்ள திரைகளின் சுவர் 5 முழ உயரம் இருக்க வேண்டும். திரைகள் மெல்லிய துகிலால் நெய்யப்பட வேண்டும். தூண்களின் பீடங்கள் வெண்கலத்தாலாக வேண்டும். 19 எல்லாக் கருவிகளும், கூடாரத்தின் ஆணிகளும், பரிசுத்தக் கூடாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வெண்கலத்தால் அமைய வேண்டும். வெளிப்பிரகாரத்திற்கான திரைகளுக்குத் தேவையான கூடார ஆணிகளும் வெண்கலத்தால் செய்யப்பட வேண்டும்.
அகல் எண்ணெய்
20 “தரத்தில் உயர்ந்த ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. தினமும் மாலை நேரத்தில் ஏற்றப்பட வேண்டிய விளக்கிற்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்து. 21 ஆரோனும், அவன் மகன்களும் விளக்கைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் முன் அறைக்குள் அவர்கள் செல்வார்கள். இது உடன்படிக்கை இருக்கும் அறைக்கு முன்பாக இருக்கும் வெளிப்புற அறை. ஒரு திரை இந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும். மாலை முதல், காலைவரை கர்த்தருக்கு முன் விளக்கு தொடர்ந்து எரிந்துக்கொண்டே இருக்கும்படி அவர்கள் அதைக் கவனித்து வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்களும், அவர்கள் சந்ததியும் இச்சட்டத்தை என்றென்றைக்கும் பின்பற்ற வேண்டும்” என்றார்.