சாராளின் மரணம்
23
சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள். அவள் கானான் நாட்டில் உள்ள கீரியாத் அர்பா (எபிரோன்) எனும் நகரத்தில் மரணமடைந்தாள். ஆபிரகாம் மிகவும் துக்கப்பட்டு அவளுக்காக அழுதான். பிறகு அவன் மரித்துப்போன மனைவியின் உடலை விட்டு எழுந்து போய் ஏத்தின் ஜனங்களோடு பேசினான். அவன், “நான் உங்கள் நாட்டில் தங்கி இருக்கும் ஒரு பிரயாணி. எனவே என் மனைவியை அடக்கம் செய்ய எனக்கு இடமில்லை. கொஞ்சம் இடம் தாருங்கள், என் மனைவியை அடக்கம் செய்ய வேண்டும்” என்று கேட்டான்.
ஏத்தின் ஜனங்களோ ஆபிரகாமிடம், “ஐயா எங்களிடமுள்ள மகா தேவனின் தலைவர்களுள் நீங்களும் ஒருவர். உமது மனைவியின் பிணத்தை அடக்கம் செய்ய எங்களிடமுள்ள எந்த நல்ல இடத்தையும் நீர் எடுத்துக்கொள்ளலாம். எங்களுக்குரிய கல்லறைகளில் உமக்கு விருப்பமான எதையும் நீர் பெறமுடியும். உமது மனைவியை அங்கே அடக்கம் செய்வதை எங்களில் எவரும் உம்மைத் தடுக்கமாட்டார்கள்” என்றனர்.
ஆபிரகாம் எழுந்து அவர்களைக் குனிந்து வணங்கினான். அவன் அவர்களிடம், “நீங்கள் உண்மையில் எனக்கு என் மனைவியை அடக்கம் செய்ய உதவ விரும்பினால், சோகாருடைய மகனாகிய எப்பெரோனுக்குச் சொல்லுங்கள். நான் மக்பேலா எனப்படும் குகையை விலைக்கு வாங்க விரும்புகிறேன். அது எப்பெரோனுக்கு உரியது. அது இந்த வயலின் இறுதியில் உள்ளது. நான் அவனுக்கு முழு விலையையும் கொடுத்துவிடுவேன். நீங்கள் அனைவரும் இதற்குச் சாட்சியாக இருக்க வேண்டும்” என்றான்.
10 எப்பெரோன் ஏத்தின் ஜனங்களிடையில் உட்கார்ந்திருந்தான். அவன் ஆபிரகாமிடம், 11 “இல்லை ஐயா, நான் அந்த நிலத்தையும் குகையையும் உமக்குத் தருவேன். நீர் உமது மனைவியை அதில் அடக்கம் செய்யலாம்” என்றான்.
12 பிறகு ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடம் குனிந்து வணங்கினான். 13 ஆபிரகாம் அனைவருக்கும் முன்பாக எப்பெரோனிடம், “ஆனால் நான் அதற்குரிய விலையைக் கொடுப்பேன். என்னுடைய பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் என் மனைவியை அடக்கம் செய்வேன்” என்றான்.
14 எப்பெரோன் ஆபிரகாமுக்கு, 15 “ஐயா, நான் சொல்வதைக் கேளுங்கள். நானூறு சேக்கல் நிறை வெள்ளி என்பது உங்களுக்கும் எனக்கும் சாதாரணமானது. எனவே நிலத்தை எடுத்துக்கொண்டு மரித்த உங்கள் மனைவியை அடக்கம் செய்யுங்கள்” என்றான்.
16 அதனால் ஆபிரகாம் நானூறு சேக்கல் நிறை வெள்ளியை எடையிட்டுக் கொடுத்தான்.
17-18 எனவே, எப்பெரோனுடைய நிலம் ஆபிரகாமுக்குக் கிடைத்தது. இது மம்ரேவின் கிழக்குப் பகுதியிலுள்ள மக்பேலாவில் இருந்தது. ஆபிரகாமுக்கு அந்த நிலமும் அதிலுள்ள மரங்களும் குகையும் சொந்தமாயின. அவன் செய்த ஒப்பந்தத்தை அங்கு அனைத்து ஜனங்களும் கண்டனர். 19 இதற்குப் பிறகே ஆபிரகாம் தன் மனைவியான சாராளை மம்ரே அருகிலுள்ள கல்லறையில் அடக்கம் செய்தான். (இது கானான் நாட்டிலுள்ள எப்பெரோன்.) 20 இப்படி ஏத்தின் ஜனங்களிடமிருந்து பெறப்பட்ட நிலம் ஆபிரகாமுக்கு உரியதாகிக் கல்லறை பூமியாக உறுதி செய்யப்பட்டது.