மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல்
48
கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும் தன் இரண்டு மகன்களையும் அவனிடம் அழைத்து சென்றான். யோசேப்பு போய்ச் சேர்ந்தபோது ஒருவர், “உங்கள் மகன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான்.
அவன் யோசேப்பிடம், “சர்வ வல்லமையுள்ள தேவன் கானான் நாட்டிலுள்ள லூஸ் என்னுமிடத்தில் என் முன் தோன்றி அங்கே என்னை ஆசீர்வதித்தார். தேவன் என்னிடம், ‘உன்னைப் பெரிய குடும்பமாக செய்வேன். நிறைய குழந்தைகளைத் தருவேன். நீங்கள் பெரிய இனமாக வருவீர்கள். உன் குடும்பம் இந்த நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்’ என்றார். இப்போது உனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்னரே அவர்கள் இந்த எகிப்து நாட்டில் பிறந்திருக்கிறார்கள். உன் பிள்ளைகள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் எனக்கு சிமியோனையும் ரூபனையும் போன்றவர்கள். எனவே இந்த இருவரும் என் பிள்ளைகள். எனக்குரிய அனைத்தையும் இவர்களுக்குப் பங்கிட்டுத் தருகிறேன். ஆனால் உனக்கு வேறு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் உன் பிள்ளைகள். ஆனால் அவர்கள் மனாசேக்கும் எப்பிராயீமுக்கும் பிள்ளைகள் போல் இருப்பார்கள். எனவே, வருங்காலத்தில் இவர்களுக்குரியவற்றை அவர்களும் பங்கிட்டுக்கொள்வார்கள். பதான் அராமிலிருந்து வரும்போது ராகேல் மரித்துப்போனாள். அது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அவள் கானான் நாட்டிலேயே மரித்தாள். நாங்கள் எப்பிராத்தாவை நோக்கி வந்தோம். சாலையோரத்தில் அவளை அடக்கம் செய்தோம்” என்றான். (எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.)
பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.
யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த மகன்கள்” என்றான்.
இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான்.
10 இஸ்ரவேலுக்கு வயதானதால் கண்களும் சரியாகத் தெரியவில்லை. எனவே, யோசேப்பு தன் மகன்களை மிக அருகில் அழைத்து வந்தான். இஸ்ரவேல் அவர்களை முத்தமிட்டு அணைத்துகொண்டான். 11 பிறகு அவன் யோசேப்பிடம், “நான் உனது முகத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தேவன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்கும்படி செய்துவிட்டார்” என்றான்.
12 பிறகு யோசேப்பு தன் மகன்களை இஸ்ரவேலின் மடியில் இருந்து இறக்கிவிட்டான். அவர்கள் அவரைக் குனிந்து வணங்கினார்கள். 13 யோசேப்பு எப்பிராயீமை தனது வலது பக்கத்திலும் மனாசேயை தனது இடது பக்கத்திலும் அமர வைத்தான். 14 ஆனால் இஸ்ரவேல் தனது கைகளைக் குறுக்காக வைத்து வலது கையை இளையவன் மீதும் இடது கையை மூத்தவன் மீதும் வைத்து ஆசீர்வாதம் செய்தான். மனாசே மூத்தவனாக இருப்பினும் அவன் மீது இடது கையை வைத்து ஆசீர்வதித்தான். 15 இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன்,
“என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர்.
அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார்.
16 எனது அனைத்து துன்பங்களிலும் என்னைக் காப்பாற்றும் தேவதூதனாக இருந்தார்.
இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவனை வேண்டுகிறேன்.
இப்போது இவர்கள் எனது பெயரையும், எனது முற்பிதாக்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயரையும் பெறுவார்கள்.
இவர்கள் வளர்ந்து மகத்தான குடும்பமாகவும், தேசமாகவும் இப்பூமியில் விளங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான்.
17 யோசேப்பு தன் தந்தை வலது கையை எப்பிராயீம் மீது வைத்திருப்பதைப் பார்த்தான். இது யோசேப்புக்கு மகிழ்ச்சி தரவில்லை. யோசேப்பு தன் தந்தையின் வலது கையை எப்பிராயீம் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்க விரும்பினான். 18 அவன் தன் தந்தையிடம், “உமது வலது கையைத் தவறாக வைத்திருக்கிறீர், மனாசேதான் முதல் மகன்” என்றான்.
19 ஆனால் யாக்கோபோ, “எனக்குத் தெரியும் மகனே! மனாசேதான் மூத்தவன், அவன் பெரியவன் ஆவான். அவனும் ஏராளமான ஜனங்களின் தந்தையாவான். ஆனால் இளையவனே மூத்தவனைவிட பெரியவனாவான். அவனது குடும்பமும் மிகப் பெரியதாக இருக்கும்” என்றான்.
20 இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான்.
“இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி
மற்றவரை வாழ்த்துவார்கள்.
அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல
தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான்.
இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான்.
21 பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “பார், நான் மரிப்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது. ஆனாலும் தேவன் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை உன் முற்பிதாக்களின் பூமிக்கு வழி நடத்திச் செல்வார். 22 நான் உன் சகோதரர்களுக்குக் கொடுக்காத சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். எமோரிய ஜனங்களிடம் இருந்து நான் வென்ற மலையை உனக்குக் கொடுத்திருக்கிறேன். நான் என் பட்டயத்தையும், வில்லையும் பயன்படுத்தி அதை நான் வென்றேன்” என்றான்.