யூதா
எழுதிய கடிதம்
1
1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து,
தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
2 எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக.
தவறு செய்கிற மக்களை தேவன் தண்டிப்பார்
3 அன்பான நண்பர்களே, நாம் எல்லோரும் ஒருமித்துப் பங்குகொள்கிற மீட்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் மிகவும் விரும்பினேன். ஆனால் வேறு சிலவற்றைக் குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதன் தேவையை நான் உணர்ந்தேன். தேவன் தம் பரிசுத்தமான மக்களுக்கு எல்லா காலத்திற்குமாகக் கொடுத்த விசுவாசத்திற்காகப் போராடுமாறு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.
4 சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள்.
5 நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார்.
6 தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார்.
7 சோதோம், கொமோரா, நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும்கூட நினைவுகூருங்கள். அந்த தேவதூதர்களைப் போன்றே அவையும் பாலியல் நீதிகளை இழந்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் மூழ்கின. நித்திய அக்கினியாகிய தண்டனையில் இப்பொழுது அவை துன்புறுகின்றன. நாம் பார்த்தறிவதற்கு தேவனுடைய தண்டனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன.
8 உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
9 ஆனால் பிரதான தேவதூதனாகிய மிகாவேல் மோசேயின் உடலுக்காகப் பிசாசோடு விவாதித்தபொழுது, பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க வேண்டுமென மிகாவேல் முடிவு கட்டவில்லை. (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல் கோரிக்கை விடுத்தான்.) “கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்” என்று மட்டும் அவன் சொன்னான்.
10 ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
11 அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.
12 உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள்.
13 அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
14 ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்.
15 எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.
16 இம்மக்கள் எப்போதும் குறை கூறிக் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் செய்யவிரும்பும் தீய காரியங்களை அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாய் பேசுகிறார்கள். தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் பிறரைக் குறித்து நல்லவை கூறுவர்.
ஓர் எச்சரிக்கையும் செய்யவேண்டிய காரியங்களும்
17 அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள்.
18 சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர்.
19 அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.
20 ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள்.
21 தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள்.
22 பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம் கொள்ளுங்கள்.
23 நெருப்பிலிருந்து விடுவிப்பதன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள். சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம் காட்டவேண்டிய சிலர் இருக்கிறார்கள். பாவத்தினால் அழுக்கேறிய அவர்களது ஆடைகளையும் கூட வெறுத்துவிடுங்கள்.
தேவனை வாழ்த்துங்கள்
24 நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும்.
25 அவர் ஒருவரே தேவன். அவரே நம் மீட்பர். அவருக்கே மகிமை, வல்லமை, அதிகாரம் அனைத்தும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கடந்தகாலம் முழுக்கவும், நிகழ்காலத்துக்கும், என்றென்றைக்குமாக உண்டாவதாக ஆமென்.