உடைந்த ஜாடி
19
கர்த்தர் என்னிடம், “எரேமியா போய் ஒரு குயவனிடமிருந்து மண்ஜாடியை வாங்கிவா. உடைந்த பானைத் துண்டுகளை எரியும் வாசலுக்கு முன்னாலுள்ள பென் இன்னோமுடைய பள்ளத்தாக்குக்குப் போ. உன்னோடு ஜனங்களில் சில மூப்பர்களையும், சில ஆசாரியர்களையும் அழைத்துப் போ என்று சொன்னார். நான் சொல்கிறவற்றை உன்னோடு இருக்கிற அந்த ஜனங்களிடம் சொல், ‘யூதாவின் அரசனே, எருசலேமின் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்! இதுதான் சர்வவல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுவது: நான் இந்த இடத்தில் விரைவில் ஒரு பயங்கரத்தை நிகழச்செய்வேன். இதைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சியும் அச்சமும் அடைவான். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் யூதாவின் ஜனங்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர். அவர்கள் இந்த இடத்தை அயல்நாட்டுத் தெய்வங்களுக்கு உரியதாகச் செய்துவிட்டனர். அவர்கள் இந்த இடத்தில் வேறு தெய்வங்களுக்குத் தகனபலிகளை அளித்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அந்தத் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. அவர்களின் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. இவை அந்நிய நாடுகளிலிருந்து வந்தப் புதிய தெய்வங்கள். யூதாவின் அரசர்கள் ஒன்றுமறியாத குழந்தைகளின் இரத்தத்தால் இந்த இடத்தை நிரப்புகிறார்கள். யூதாவின் அரசர்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் மகன்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் மகன்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் மகன்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்பொழுது, ஜனங்கள் இந்த இடத்தை இன்னோமின் பள்ளத்தாக்கு என்றும் “தோப்பேத்” என்றும் அழைக்கின்றனர். ஆனால், நான் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது: ஜனங்கள் இந்த இடத்தை “கொலையின் பள்ளத்தாக்கு” என்று அழைக்கும் நாள் வருகிறது. இந்த இடத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களின் திட்டங்களை நாசமாக்குவேன். பகைவர்கள் இந்த ஜனங்களைத் துரத்துவார்கள். இந்த இடத்தில் யூதாவின் ஜனங்கள் வாளால் கொல்லப்படுமாறு விடுவேன். அவர்களது மரித்த உடல்களைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாக்குவேன். இந்நகரத்தை நான் முழுமையாக அழிப்பேன். ஜனங்கள் எருசலேமைக் கடந்துப்போகும்போது பிரமித்து, தலையை அசைப்பார்கள். இந்நகரம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறியும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். பகைவர்கள் நகரத்தைச்சுற்றி தம் படைகளை அழைத்து வருவார்கள். அப்படை ஜனங்கள் வெளியே சென்று உணவு பெறுவதை அனுமதிக்காது. எனவே, நகரத்தில் உள்ள ஜனங்கள் பட்டினியாக இருப்பார்கள். அவர்கள் தம் சொந்த மகன்கள் மற்றும் மகள்களின் உடலை உண்ணும் அளவிற்குப் பசியை அடைவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் உண்ணத் தொடங்குவார்கள்.’
10 “எரேமியா, நீ இவற்றையெல்லாம் ஜனங்களுக்குச் சொல். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஜாடியை உடைத்துவிடு. 11 அப்போது இவற்றைச் சொல்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், நான் யூதா நாட்டையும் எருசலேமையும், ஒருவன் மண்ஜாடியை உடைப்பதுப்போன்று உடைப்பேன். இந்த ஜாடியை மீண்டும் பழையபடி ஆக்கமுடியாது. யூதா நாட்டுக்கும் இதுபோல் ஆகும். வேறு இடமில்லை என்று சொல்லுகிற வரையில் தோப்பேத்தில் மரித்த ஜனங்கள் புதைக்கப்படுவார்கள் இந்த வார்த்தை கர்த்தரிடம் உள்ளது. 12 இவைகளை நான் இந்த ஜனங்களுக்கும் இந்த இடத்துக்கும் செய்வேன். இந்த நகரத்தை தோப்பேத்தைப் போலச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 13 ‘எருசலேமில் உள்ள வீடுகள் தோப்பேத்தைப்போன்று “அசுத்தமாகும்” அரசர்களின் அரண்மனைகள் தோப்பேத்தைப்போன்று அழிக்கப்படும். ஏனென்றால், அவ்வீடுகளின் கூரையில் பொய்த் தெய்வங்களை வைத்துத் தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் நட்சத்திரங்களைத் தொழுதுகொள்கின்றனர். அவர்களை மகிமைப்படுத்தத் தகன பலிகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்குப் பானங்களின் காணிக்கை கொடுத்தனர்.’”
14 பிறகு, எரேமியா தோப்பேத்தை விட்டு கர்த்தர் பிரசங்கம் பண்ணுமாறு சொன்ன இடத்துக்குச் சென்றான். எரேமியா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, ஆலயத்தின் பிரகாரத்தில் நின்றான். எரேமியா அனைத்து ஜனங்களிடமும் சொன்னான். 15 “இதுதான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ‘நான் எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேரழிவைக் கொண்டுவருவேன் என்று சொன்னேன். நான் விரைவில் அவை நிகழுமாறு செய்வேன். ஏனென்றால், ஜனங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், அவர்கள் என்னை கவனிக்கவும், எனக்குக் கீழ்ப்படியவும் மறுத்துவிட்டனர்.’”