எரிகோவில் ஒற்றர்கள்
2
அகாசியாவில் நூனின் மகனாகிய
யோசுவாவும், ஜனங்கள் அனைவரும் முகாமிட்டிருந்தனர். யோசுவா இரண்டு ஒற்றர்களை அனுப்பினான். அம்மனிதர்களை யோசுவா அனுப்பிய விவரம் யாருக்கும் தெரியாது. யோசுவா அவர்களிடம், “போய் தேசத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தைப் பார்த்து வாருங்கள்” என்றான்.
எனவே அவர்கள் எரிகோ நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்று, அங்கே இரவில் தங்கினர். அப்பெண்ணின் பெயர் ராகாப்.
சிலர் எரிகோவின் அரசனிடம் சென்று, “நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்” என்றனர்.
எனவே எரிகோவின் அரசன் ராகாபுக்கு, “உனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிற மனிதர்களை ஒளித்து வைக்காதே. அவர்களை வெளியே அழைத்து வா. அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க வந்துள்ளனர்” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினான்.
அப்பெண் அவ்விருவரையும் மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவள், “அவ்விருவரும் இங்கு வந்திருந்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்கிற விவரம் எனக்குத் தெரியாது. மாலையில், நகர வாயிலை அடைக்கும் சமயத்தில், அவ்விருவரும் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் விரைந்து சென்றால், அவர்களைப் பிடிக்கக் கூடும்” என்றாள். (ராகாப், அவள் இப்படி கூறினாலும், உண்மையில் அவ்விருவரையும், கூரையின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே அவள் குவித்து வைத்திருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.)
எனவே அரசனால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி அரசனின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள்.
ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம், “உங்கள் ஜனங்களுக்குக் கர்த்தர் இத்தேசத்தைக் கொடுத்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களுக்கு அச்சமூட்டுகிறீர்கள். இத்தேசத்தில் வாழும் ஜனங்கள் உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். 10 கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய அரசர்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த அரசர்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம். 11 அந்தக் காரியங்களை நாங்கள் அறிந்து மிகவும் அஞ்சினோம். இப்போது, எங்களில் எந்த மனிதனுக்கும் உங்களை எதிர்க்கும் துணிவு இல்லை. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலே வானத்தையும், கீழே பூமியையும் ஆளுகிறார்! 12 எனவே நீங்கள், இப்போது எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் இரக்கம் காட்டி, உங்களுக்கு உதவினேன். எனவே என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதாகக் கர்த்தருக்கு முன்னால் வாக்களியுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களென்று எனக்கு உறுதி கூறுங்கள். 13 நீங்கள் எனது தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர் உட்பட, எனது குடும்பத்தார் அனைவரையும் உயிரோடு வாழ அனுமதிப்பதாக எனக்குக் கூறுங்கள். எங்களை மரணத்தினின்று விடுவிப்பதாக எனக்கு வாக்குறுதி அளியுங்கள்” என்றாள்.
14 அவ்விருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள், “உங்கள் உயிருக்கு எங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம். நாங்கள் செய்வதை யாருக்கும் சொல்லாதே. கர்த்தர், எங்களுக்குரிய நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உனக்கு இரக்கம் காட்டுவோம். நீ எங்களை நம்பலாம்” என்றனர்.
15 நகரத்தின் மதிலில் அப்பெண்ணின் வீடுகட்டப்பட்டிருந்தது. அது சுவரின் ஒரு பாகமாக அமைந்திருந்தது. எனவே அப்பெண் ஜன்னல் வழியே ஒரு கயிற்றின் மூலமாக அவ்விருவரையும் கீழே இறக்கினாள். 16 அப்போது அப்பெண் அம்மனிதரை நோக்கி: “அரசனின் ஆட்கள் உங்களைக் காணாதபடிக்கு மேற்குத் திசையில் மலைகளின் உள்ளே சென்றுவிடுங்கள். அங்கு மூன்று நாட்கள் ஒளிந்திருங்கள். அரசனின் ஆட்கள் திரும்பி வந்தபின் நீங்கள் திரும்பிப் போகலாம்” என்றாள்.
17 அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். 18 நாங்கள் தப்பிச்செல்ல உதவுவதற்கு நீ இந்தச் சிவப்புக் கயிற்றைப் பயன்படுத்துகிறாய். நாங்கள் இத்தேசத்திற்குத் திரும்பவும் வருவோம். அப்போது உன் வீட்டு ஜன்னலில் இந்தக் கயிற்றை நீ கட்ட வேண்டும். உன் தந்தை, தாய், குடும்பத்தினர் எல்லோரையும் உன்னோடு வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளவேண்டும். 19 இவ்வீட்டில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் காப்போம். உன் வீட்லுள்ள யாரேனும் காயமுற்றால், நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகளாவோம். ஆனால் உன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியே போனால் அவன் கொல்லப்படக்கூடும். அவனுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அது அவனுடைய குற்றமாகும். 20 நாங்கள் இந்த ஒப்பந்தத்தை உன்னோடு செய்கிறோம். ஆனால் நாங்கள் செய்கிறதை நீ யாருக்காவது கூறினால், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் நீங்கலாயிருப்போம்” என்றனர்.
21 அதற்கு அப்பெண், “நீங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள். அம்மனிதர்கள் அவள் வீட்டைவிட்டுச் சென்றனர். அப்பெண் ஜன்னலில் அச்சிவப்பு கயிற்றைக் கட்டினாள்.
22 அவ்விருவரும் அவள் வீட்டிலிருந்து மலைகளுக்குச் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். அரசனின் ஆட்கள் பாதைகளில் எல்லாம் தேடினார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் நகருக்குத் திரும்பினார்கள். 23 ஒற்றர்கள் இருவரும் மலைகளைவிட்டு நீங்கி, நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் சென்றார்கள். தாங்கள் அறிந்து வந்த எல்லாவற்றையும் அவர்கள் யோசுவாவுக்குக் கூறினார்கள். 24 அவர்கள் யோசுவாவை நோக்கி, “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அத்தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றார்கள்.