18
இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான்.
“எனது பெலனாகிய கர்த்தாவே,
நான் உம்மை நேசிக்கிறேன்!”
கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.
பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார்.
தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும்.
உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.
ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!
மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன.
மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.
மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.
ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன்.
தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார்.
என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.
பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!
தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று.
தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின.
அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன.
கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்!
திரண்ட காரிருளின் மேல் நின்றார்!
10 கர்த்தர் காற்றின் மேல் எழுந்து
பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார்.
11 அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார்.
இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார்.
12 அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது.
புயலும் மின்னலும் தோன்றின.
13 கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார்.
உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.
14 கர்த்தர் அம்புகளைச்* செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர்.
15 கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர்,
உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது.
கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது.
பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.
16 கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார்.
17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள்.
அவர்கள் என்னைப் பகைத்தார்கள்.
என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள்.
எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.
18 நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார்.
19 கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார்.
என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
20 நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார்.
நான் தவறேதும் செய்யவில்லை, எனவே எனக்காக அவர் நன்மைகளைச் செய்வார்.
21 ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்.
என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை.
22 கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன்.
அவர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
23 அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும்
களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன்.
24 அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார்.
ஏனெனில் நான் கபடமற்றவன்.
தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை.
அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.
25 கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர்.
ஆண்டவரே ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர்.
26 கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர்.
ஆனால் இழிவானவர்களையும், கபடதாரிகளையும் நீர் மிக நன்கு அறிவீர்.
27 கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர்.
அகந்தையுள்ளோரைத் தாழ்த்துவீர்.
28 கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர்.
என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது!
29 கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன்.
தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன்.
30 தேவனுடைய வல்லமை முழுமையானது.
கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டிருக்கிறது.
அவரை நம்பும் ஜனங்களை அவர் பாதுகாக்கிறார்.
31 கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை.
நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை.
32 தேவன் எனக்கு பெலன் தந்து
தூய வாழ்க்கை வாழ உதவுவார்.
33 மானைப்போல ஓடுவதற்குத் தேவன் உதவுகிறார்.
உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார்.
34 தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார்.
எனவே எனது கரங்கள் பலமான வில்லை வளைக்கும்.
35 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்தீர்.
உமது வலது கரத்தால் என்னைத் தாங்கினீர்.
என் சத்துருக்களை நான் வெல்ல உதவி செய்தீர்.
36 நான் தடுமாறாமல் விரைந்து நடக்கும்படிக்கு உதவி செய்தீர்.
எனது கால்களையும், மூட்டுக்களையும் பலப்படுத்தினீர்.
37 நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும்.
அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன்.
38 எனது பகைவரைத் தோற்கடிப்பேன்.
அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள்.
என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள்.
39 தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர்.
என் பகைவர்கள் என் முன்னே விழும்படி செய்தீர்.
40 என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி,
அவர்களை அழிக்கச் செய்தீர்.
41 என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள்.
அவர்களைக் காப்பவர் எவருமில்லை.
கர்த்தரை நோக்கி முறையிட்டனர்,
அவர் பதிலளிக்கவில்லை.
42 நான் என் பகைவரைத் துண்டிப்பேன்.
அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள்.
அவர்களைத் துண்டாக நசுக்குவேன்.
43 என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும்.
எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள்.
44 அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள்.
அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள்.
45 அவர்கள் தைரியமிழந்து
தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.
46 கர்த்தர் உயிரோடிருக்கிறார்!
நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்!
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
அவர் மேன்மையானவர்.
47 தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார்.
என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார்.
48 கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.
எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர்.
கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர்.
49 கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.
50 தான் ஏற்படுத்தின அரசன் யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்!
தான் தேர்ந்தெடுத்த அரசனுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

* 18:14: அம்புகள் அது “மின்னல்.”