ஆசாவின் மாற்றங்கள்
15
தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் மகன். அசரியா, ஆசாவைச் சந்திக்கச் சென்றான். அசரியா, “ஆசாவே, யூதா மற்றும் பென்யமீனின் எல்லா ஜனங்களே! என்னைக் கவனியுங்கள். நீங்கள் கர்த்தரோடு இருக்கும்போது அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் கர்த்தரைத் தேடினால் கண்டுகொள்ளலாம். ஆனால் நீங்கள் அவரை விட்டு விலகினால் அவரும் விலகி விடுவார். நீண்ட காலத்திற்கு இஸ்ரவேலர்கள் உண்மையான தேவன் இல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் போதிக்கும் ஆசாரியர் இல்லாமலும், சட்டங்கள் இல்லாமலும் இருந்தார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துன்பம் வந்தபோது அவர்கள் மீண்டும் கர்த்தருடைய பக்கம் திரும்பினார்கள். அவரே இஸ்ரவேலின் தேவன். அவர்கள் கர்த்தரைத் தேடினார்கள்; கண்டுகொண்டனர். அந்தக் கஷ்டகாலங்களில் எவராலும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. எல்லா நாடுகளிலும் துன்பங்கள் ஏற்பட்டன. ஒரு நாடு இன்னொரு நாட்டை அழித்தது. ஒரு நகரம் இன்னொரு நகரத்தை அழித்தது. தேவன் அவர்களுக்கு எல்லாவிதமான துன்பங்களையும் கொடுக்கவேண்டும் என்று எண்ணியதால் இவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் ஆசா, நீயும் யூதா மற்றும் பென்யமீனின் ஜனங்களும் பலமுடையவர்களாக இருங்கள். பலவீனமாய் இருக்காதீர்கள். எதையும் கைவிட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் பணிகளுக்குத்தக்க வெகுமதி கிடைக்கும்!” என்றான்.
ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியான ஓபேதின் வார்த்தைகளையும் கேட்டதும் ஊக்க உணர்வை அடைந்தான். பிறகு அவன் யூதா மற்றும் பென்யமீன் பகுதிகளில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களை அப்புறப்படுத்தினான். எப்பிராயீம் மலைநாட்டில் தான் கைப்பற்றிய ஊர்களில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தினான். கர்த்தருடைய ஆலய முன்வாயிலின் முன்னால் இருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
பிறகு ஆசா, யூதா மற்றம் பென்யமீன் ஜனங்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். அவன் எப்பிராயீம், மனாசே, சிமியோன் ஆகிய கோத்திரத்தினர்களையும் கூட்டினான். அவர்கள் வாழ்வதற்காக இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதாவிற்கு குடியேறியவர்கள். இதுபோல் ஏராளமான ஜனங்கள் யூதாவிற்கு வந்தனர். ஏனென்றால் ஆசாவின் தேவனாகிய கர்த்தர் ஆசாவோடு அங்கே இருப்பதைக் கண்டனர்.
10 ஆசாவும், அந்த ஜனங்கள் அனைவரும் எருசலேமில் கூடினார்கள். அது ஆசாவின் 15வது ஆட்சியாண்டின் மூன்றாவது மாதமாகும். 11 அப்போது அவர்கள் 700 காளைகளையும், 7,000 ஆடுகளையும் பலியிட்டனர். இப்பலிப் பொருட்களையும் மற்ற விலையுயர்ந்தவற்றையும் ஆசாவின் படையினர் தம் எதிரிகளிடமிருந்து அபகரித்து வந்தனர். 12 பிறகு அவர்கள் தம் மனப்பூர்வமாகவும், ஆத்மபூர்வமாகவும் தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அவரே அவர்களது முற்பிதாக்களால் சேவைசெய்யப்பட்ட தேவன். 13 எவனொருவன் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்ய மறுக்கிறானோ அவன் கொல்லப்பட்டான். அவன் முக்கியமானவனா அல்லது முக்கியம் இல்லாதவனா, அவன் ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. 14 பிறகு ஆசாவும், ஜனங்களும் கர்த்தருக்கு முன்னால் ஒரு சபதம் செய்தார்கள். அவர்கள் மிக உரத்தகுரலில் கூவினார்கள். மேலும் செம்மறியாட்டுக் கடாவின் கொம்புகளையும், எக்காளங்களையும் ஊதினார்கள். 15 யூதா ஜனங்கள் அனைவரும் அந்த உறுதிமொழியைக் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர்கள் தம் மனப்பூர்வமாகச் சத்தியம் செய்தனர். அவர்கள் மனப் பூர்வமாக தேவனைப் பின்பற்றினர். அவர்கள் தேவனைத் தேடிக் கண்டடைந்தனர். எனவே கர்த்தர் நாடு முழுவதிலும் உள்ள ஜனங்களுக்கு சமாதானத்தை அளித்தார்.
16 ஆசா அரசன் தன் தாயான மாகாளை ராஜாத்தி என்ற பதவியிலிருந்து நீக்கிவிட்டான். ஏனென்றால் அவள் அஷா என்னும் தேவதையை வழிபடும் கம்பத்தை உருவாக்கினாள். ஆசா அந்த அஷா கம்பத்தை உடைத்து துண்டுத்துண்டாக நொறுக்கிவிட்டான். பிறகு அத்துண்டுகளை கீதரோன் சமவெளியில் சுட்டெரித்தான். 17 பல மேடைகளோ யூதா நாட்டில் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தன. எனினும் ஆசாவின் இதயம் அவனது வாழ்நாள் முழுவதும் கர்த்தரோடு இருந்தது.
18 ஆசா, தானும் தன் தந்தையும் அளித்த பரிசுத்த அன்பளிப்புகளை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தான். அவை பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. 19 ஆசாவின் 35வது ஆட்சியாண்டுவரை நாட்டில் போர் இல்லாமல் இருந்தது.