௬
இஸ்ரவேலிலிருந்து நல்ல காலங்கள் அகற்றப்படும்
௧ சீயோனில் வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு
சமாரியா மலையில் மிகவும் பாதுகாப்பு இருப்பதாக எண்ணும் ஜனங்களே, உங்களுக்கு மிகுந்த கேடு வரும்.
நீங்கள் மிக முக்கியமான நாட்டின் முக்கியமான தலைவர்கள். “இஸ்ரவேல் வீட்டார்”
உங்களிடம் ஆலோசனைக்காக வருகிறார்கள்.
௨ கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள்.
அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள்.
பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள்.
நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா?
இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா?
௩ நீங்கள் அந்தத் தண்டனை தரும் நாளை நோக்கி விரைகிறீர்கள்.
அந்த வன்முறை ஆட்சியை மிகவும் பக்கத்தில் கொண்டு வருகிறீர்கள்.
௪ ஆனால் இப்போது, நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறீர்கள்.
நீங்கள் தந்தக் கட்டில்களில் படுக்கிறீர்கள்.
நீங்கள் மஞ்சங்களில் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறீர்கள்.
நீங்கள் மந்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் ஆட்டுக்குட்டிகளையும் மாட்டுத் தொழுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுக் குட்டிகளையும் உண்கிறீர்கள்.
௫ நீங்கள் உங்கள் வீணைகளை மீட்டுகிறீர்கள்.
தாவீதைப் போன்று உங்கள் இசைக் கருவிகளில் பயிற்சி செய்கிறீர்கள்.
௬ நீங்கள் அழகான கிண்ணங்களில் மது குடிக்கிறீர்கள்.
நீங்கள் சிறந்த மணப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள்.
யோசேப்பின் குடும்பம் அழிக்கப்படுவதைக் கண்டு
கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்.
௭ அந்த ஜனங்கள் இப்பொழுது மங்சங்களில் வசதியாகப் படுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நல்ல நேரங்கள் முடிவடையும். அவர்கள் அந்நிய நாட்டுக்குக் கைதிகளைப்போன்று கொண்டுசெல்லப்படுவார்கள். எடுத்துக்கெள்ளப்படுகிறவர்களில் இவர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். ௮ எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது சொந்த நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி கொடுத்தார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இந்த வாக்குறுதியை அளித்தார்.
“நான், யாக்கோபு பெருமைக்கொள்கிற காரியங்களை வெறுக்கிறேன்.
நான் அவனது பலமுள்ள கோபுரங்களை வெறுக்கிறேன்.
எனவே நான் பகைவன் இந்த நகரத்தையும்
அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள விடுவேன்.”
கொஞ்சம் இஸ்ரவேலர்களே உயிரோடு விடப்படுவர்
௯ அப்போது, சில வீடுகளில் பத்துபேர் உயிர் பிழைக்கலாம், ஆனால் அவர்களும் மரித்துப்போவார்கள். ௧௦ ஒருவன் மரிக்கும் போது ஒரு உறவினன் வந்து உடலைப் பெற்று வெளியே எடுத்துக்கொண்டு எரிக்க வருவான். உறவினன், எலும்பை வெளியே கொண்டுபோக வருவான். வீட்டின் உட்புறத்திலே மறைந்திருக்கிற யாரையாவது அழைப்பான்.
“உன்னோடு வேறு மரித்த உடல்கள் உள்ளனவா?” என்று கேட்பான். அந்த மனிதன், “இல்லை” என்று பதில் சொல்லுவான். ஆனால் அந்த உறவினன், “நீ மௌனமாயிரு! நாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக் கூடாது” என்று சொல்வான்.
௧௧ பார், தேவனாகிய கர்த்தர் கட்டளை கொடுப்பார்.
பெரிய வீடுகள் துண்டுகளாக உடைக்கப்படும்.
சிறிய வீடுகள் சிறிய துண்டுகளாக உடைக்கப்படும்.
௧௨ ஜனங்கள் குதிரைகளைத் தளர்ந்த பாறைகளின் மேல் ஓடும்படிச் செய்வார்களா? இல்லை.
ஜனங்கள் பசுக்களைப் உழுவதற்கு பயன்படுத்துவார்களா? இல்லை.
ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தலை கீழாகத் திருப்பினீர்கள்.
நீங்கள் நன்மையையும் நேர்மையையும் விஷமாக மாற்றினீர்கள்.
௧௩ நீங்கள் லோடேபரில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
நீங்கள், “நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் கர்ணாயீமை எடுத்துக் கொண்டோம்” என்று சொல்கிறீர்கள்.
௧௪ “ஆனால் இஸ்ரவேலே, நான் உங்களுக்கு எதிராக ஒரு நாட்டைக் கொண்டு வருவேன். அந்நாடு உன் முழு நாட்டுக்கும் அது லெபோ ஆமாத் முதல் அரபா ஓடைவரை துன்பங்களைக் கொண்டுவரும்.” சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறினார்.