௨௦
போருக்கான விதிகள்
௧ “நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்து, போருக்காகக் செல்லும்போது குதிரைகளையும், இரதங்ளையும், உங்களிடமிருப்பவர்களைவிட மிகுதியான ஜனங்களையும் அவர்களிடம் கண்டால், அவற்றைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கின்றார்.
௨ “நீங்கள் போருக்குச் செல்கின்றபோது, ஆசாரியன் போர் வீரர்களுடன் சேர்ந்து வந்து அவர்களுடன் பேசவேண்டும். ௩ ஆசாரியன் உங்களிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களே நான் கூறுவதை கேளுங்கள், நீங்கள் இன்று போரில் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடப் போகின்றீர்கள். நீங்கள் மனந்தளர்ந்துவிடாதீர்கள்! நீங்கள் அவர்களைக் கண்டு கலக்கமோ, விரக்தியோ அடைந்து விடாதீர்கள்! உங்கள் எதிரிகளைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ௪ ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு வருகின்றார். அவர் உங்கள் எதிரிகளை எதிர்த்து நீங்கள் போரிட துணைசெய்வார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வெற்றிப் பெற துணைபுரிவார்!’ என்று கூறவேண்டும்.
௫ “அந்த லேவிய அதிகாரிகள் வீரர்களிடம்: ‘இங்கே யாராவது புது வீட்டைக்கட்டி இன்னும் அவ்வீட்டைப் பிரதிஷ்டை செய்யாமல் இங்கு போருக்காக வந்திருப்பீர்கள் என்றால், அவன் அவ்வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஏனென்றால் போரில் அவன் கொல்லப்பட்டால் அவனது வீட்டினை மற்றொருவன் பிரதிஷ்டை பண்ண நேரிடும். ௬ தன் தோட்டத்தில் திராட்சையைப் பயிரிட்டு, அதன் பலனை அனுபவிக்காதவர்யாரும் இங்கே இருந்தால், அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். ஏனெனில் யுத்தத்தில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் அவன் தோட்டத்துத் திராட்சையை அனுபவிக்க நேரிடும். ௭ திருமணம் நிச்சயிக்கப்பட்டவன் யாரேனும் இங்கு இருந்தால் அவன் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். போரில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் இவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்ள நேரிடும்’ என்று சொல்வார்கள்.
௮ “மேலும் அவ்வதிகாரிகள் ஜனங்களிடம் கண்டிப்பாகக் கூறவேண்டியது, ‘இங்கே தன்னம்பிக்கை இழந்து, பயந்துகொண்டு இருக்கின்ற தைரியமற்றவர்கள் யாராவது இருந்தால் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்கள் மனந்தளர்ந்திட இவன் காரணமாக இருக்கமாட்டான்.’ ௯ பின்பு, அந்த அதிகாரிகள் படை வீரர்களுடன் பேசி முடித்த பின்பு, வீரர்களைத் தலைமை ஏற்றுச்செல்ல தளபதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
௧௦ “நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்கச் செல்லும்போது, முதலில் அந்த நகர ஜனங்களுக்கு சமாதானம் கூறவேண்டும். ௧௧ அவர்கள் உங்களது சமாதானத்தை ஏற்றுக்கொண்டால், அவர்களது வாசல்களைத் திறந்திடுவார்கள். பின், அந்நகரத்தின் எல்லா ஜனங்களும் உங்களது அடிமைகளாகிவிடுவதுடன், உங்களுக்காக ஊழியம் செய்ய முன் வருவார்கள். ௧௨ ஆனால், அந்த நகர ஜனங்கள் உங்களோடு சமாதானம் செய்ய மறுத்து உங்களை எதிர்த்து சண்டையிட்டால், நீங்கள் அந்த நகரத்தை முற்றுகையிடுங்கள். ௧௩ உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்நகரைக் கைப்பற்ற உங்களை அனுமதிக்கும்போது, நீங்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொல்லவேண்டும். ௧௪ ஆனால் நீங்கள் அங்குள்ள பெண்கள், குழந்தைகள், மாடுகள் ஆகியவற்றைக் கொல்லாமல் உங்களுக்காக அந்நகரிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்து அனுபவிப்பீர்களாக. இந்த எல்லாப் பொருட்களையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகவே இவற்றையெல்லாம் கொடுத்துள்ளார். ௧௫ நீங்கள் வசிக்கின்ற நகரங்களையுடைய இந்த தேசத்தை விட்டு வெகுதூரத்திலுள்ள எல்லா நகரங்களிலும் இவ்வாறே செய்வீர்களாக.
௧௬ “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். ௧௭ அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். ௧௮ ஏனென்றால் அவர்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களை எந்தவொரு பாவத்தையும் செய்யக் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொண்ட அந்த அருவருப்பான செயல்களில் எந்த ஒன்றையும் உங்களை செய்யுமாறு கற்றுக்கொடுக்க இயலாத வண்ணம் அவர்களை அழிக்கவேண்டும்.
௧௯ “நீங்கள் ஒரு நகரத்தை எதிர்த்துப் போர் செய்யும்போது, அந்நகரத்தை நீண்ட காலம் முற்றுகையிடுகின்ற நிலையில் அந்நகரைச் சுற்றிலும் உள்ள எந்தவொரு பழங்கள் தரக்கூடிய மரத்தையும் நீங்கள் வெட்டக் கூடாது, நீங்கள் அவற்றை வெட்டாமல் இருந்தால்தான், அந்த மரங்களிலிருந்து நீங்கள் உண்ணுவதற்காகப் பழங்களைப் பெறலாம். அந்த மரங்கள் எல்லாம் உங்களுக்கு எதிரி அல்ல. ஆகையால், அவைகளுக்கு எதிராக நீங்கள் போரிட வேண்டாம். ௨௦ ஆனால் உண்ணுவதற்கேற்ற பழங்களைத் தராத மரங்கள் என்று நீங்கள் அறிந்தபின் மரங்களை வெட்டிக்கொள்ளலாம். நீங்கள், அந்த மரங்களை எடுத்து அந்த நகரத்தை முற்றுகையிடவும், அந்நகருக்கு எதிராக நடத்தும் போரில் தேவையான படைக்கருவிகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு அந்நகரம் வீழ்ச்சி அடையும்வரை, நீங்கள் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.