௧௨௨
ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்
௧ ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
நான் மிகவும் மகிழ்ந்தேன்.
௨ இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
௩ இது புதிய எருசலேம்.
ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
௪ இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
௫ அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.
௬ எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
“உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
௭ உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
௮ என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
௯ நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.