அத்தியாயம்– ௭
சாலொமோன் தன்னுடைய அரண்மனையைக் கட்டுதல்
௧ சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க பதிமூன்று வருடங்கள் சென்றது. ௨ அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான். ௩ ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது. ௪ மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது. ௫ எல்லா ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் சதுரமாக இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது. ௬ ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது. ௭ தான் இருந்து நியாயம் தீர்ப்பதற்கு நியாயாசனம் போடப்பட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவங்கி மறுபக்கம்வரை கேதுரு பலகைகளால் தரையை மூடினான். ௮ அவன் தங்கும் அவனுடைய அரண்மனை மண்டபத்திற்குள்ளே அதே மாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் திருமணம் செய்த பார்வோனின் மகளுக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டினான். ௯ இவைகளெல்லாம், உள்ளேயும் வெளியேயும், அஸ்திபாரம்முதல் மேல் கூரைவரை, வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவின்படி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்டது. ௧௦ அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையுயர்ந்த பெரிய கற்களாக இருந்தது. ௧௧ அதின்மேல் உயரமாக இருக்கும் அளவின்படி வேலைப்பாடு செய்யப்பட்ட விலையுயர்ந்த கற்களும், கேதுரு மரங்களும் வைக்கப்பட்டிருந்தது. ௧௨ பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை வேலைப்பாடு செய்யப்பட்ட கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தை அலங்காரம் செய்தல்
௧௩ ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். ௧௪ இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு விதவையின் மகன்; இவனுடைய தகப்பன் தீரு நகரத்தைச் சேர்ந்த வெண்கல கைவினை கலைஞர்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும், புத்தியும், அறிவும் உள்ளவனாக இருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடம் வந்து, அவனுடைய வேலையையெல்லாம் செய்தான். ௧௫ இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூணும் பதினெட்டுமுழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவும் பன்னிரண்டு முழ நூலளவுமாக இருந்தது. ௧௬ அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாக இருந்தது. ௧௭ தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் ஏழு ஏழாக இருந்தது. ௧௮ தூண்களைச்செய்த விதம்: உச்சியில் உள்ள கும்பங்களை மூடுவதற்காக, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதுளம்பழங்களைச் செய்தான். ௧௯ மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய உச்சியில் உள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், நான்குமுழ உயரமுமாக இருந்தது. ௨௦ இரண்டு தூண்களின்மேலே உள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகில் இருந்த இடத்தில் இருநூறு மாதுளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது. ௨௧ அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான். ௨௨ தூண்களுடைய சிகரத்தில் லீலிமலர்களைப்போல வேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாகத் தூண்களின் வேலை முடிந்தது. ௨௩ வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வட்டவடிவில் கட்டினான்; சுற்றிலும் அதினுடைய ஒருவிளிம்பு துவங்கி மறுவிளிம்புவரை, அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாக இருந்தது. ௨௪ அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது. ௨௫ அது பன்னிரண்டு காளைகளின் மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி காளைகளின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது. ௨௬ அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும். ௨௭ பத்து வெண்கல கால்களையும் செய்தான்; ஒவ்வொரு காலும் நான்குமுழ நீளமும், நான்குமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமாக இருந்தது. ௨௮ அந்த கால்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்கு பலகைகள் உண்டாக்கப்பட்டிருந்தது; பலகைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது. ௨௯ சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்த பலகைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலேயும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள வாய்க்கால்களும் அதனோடு இருந்தது. ௩௦ ஒவ்வொரு கால்களுக்கும் நான்கு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நான்கு முனைகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்த அச்சுகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக வாய்க்கால்களுக்கு நேராக இருந்தது. ௩௧ அதின் வாய் மேலே ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ தட்டையுமாக, அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் பலகைகள் வட்டமாயிராமல் சதுரமாக இருந்தது. ௩௨ அந்த நான்கு உருளைகள் பலகைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் கால்களிலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாக இருந்தது. ௩௩ உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலையைப் போலவே இருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாக இருந்தது. ௩௪ ஒவ்வொரு காலுடைய நான்கு முனைகளிலும், காலிலிருந்து புறப்படுகிற நான்கு கைப்பிடிகள் இருந்தது. ௩௫ ஒவ்வொரு கால்களின் தலைப்பகுதியிலும் அரைமுழ உயரமான வட்டவடிவ கட்டும், ஒவ்வொரு காலினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் பலகைகளும் இருந்தது. ௩௬ அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் பலகைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பனை மரங்களுடைய சித்திர வேலைகளை செய்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், வாய்க்கால்களிலும் இருக்கும் இடங்களுக்குத் தகுந்தபடி செய்தான். ௩௭ இப்படியாக அந்தப் பத்து கால்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்து வேலையுமாக இருந்தது. ௩௮ பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரையும் நாற்பது குடம் பிடிக்கும்; நான்குமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து கால்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது. ௩௯ ஐந்து கால்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து கால்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குநோக்கி வைத்தான். ௪௦ பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாக ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான். ௪௧ அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும், ௪௨ தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் செய்த இரண்டு வரிசை மாதுளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னல்களுக்கும் நானூறு மாதுளம்பழங்களும், ௪௩ பத்து கால்களும், கால்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும், ௪௪ ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு காளைகளும், ௪௫ செம்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிப்பொருட்களும் சுத்தமான வெண்கலமாக இருந்தது. ௪௬ யோர்தானுக்கு அடுத்த சமமான பூமியிலே, சுக்கோத்திற்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா இவைகளை வார்த்தான். ௪௭ இந்தச் சகல பணிப்பொருட்களின் வெண்கலம் மிகவும் ஏராளமாக இருந்ததால், சாலொமோன் அவைகளை எடை பார்க்கவில்லை; அதினுடைய எடை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை. ௪௮ பின்னும் கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும், ௪௯ மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான். ௫௦ பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகாபரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான மொட்டுகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான மொட்டுகளையும் செய்தான். ௫௧ இப்படியாக ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்செய்யும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.