2 Kings
2 இராஜாக்கள்
அத்தியாயம்– ௧
அகசியாவுக்கு வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு
௧ ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள். ௨ அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் மர தளத்திலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். ௩ கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? ௪ இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். ௫ அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான். ௬ அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள். ௭ அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான். ௮ அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி; ௯ அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். ௧௦ அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது. ௧௧ மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான். ௧௨ எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது. ௧௩ மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. ௧௪ இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான். ௧௫ அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், ௧௬ அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். ௧௭ எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். ௧௮ அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.