அத்தியாயம்– ௫
௧ அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான். ௨ பிரதான ஆசாரியனும் பலவீனமுள்ளவனாக இருக்கிறதினாலே, அறியாதவர்களுக்கும் வழி தவறிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாக இருக்கிறான். ௩ இதனால், அவன் மக்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாக இருக்கிறது. ௪ மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்படாமல், ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாக ஏற்படுகிறதில்லை. ௫ அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார். ௬ அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். ௭ அவர் சரீரத்தில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினால் கேட்கப்பட்டு, ௮ அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, ௯ தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, ௧௦ மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது.
இடறிப்போவதைக்குறித்த எச்சரிக்கை
௧௧ இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும். ௧௨ காலத்தைப் பார்த்தால், போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது; நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை, பாலைக் குடிக்கிறவர்களானீர்கள். ௧௩ பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான். ௧௪ திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.