அத்தியாயம்– ௨௭
யூதாசின் மரணம்
௧ விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, ௨ அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். ௩ அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: ௪ குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். ௫ அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். ௬ பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, ௭ ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். ௮ இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. ௯ இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, ௧௦ கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
பிலாத்துவின் முன்பு இயேசு
௧௧ இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். ௧௨ பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. ௧௩ அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். ௧௪ அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். ௧௫ காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது. ௧௬ அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். ௧௭ பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, ௧௮ அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். ௧௯ அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். ௨௦ பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். ௨௧ தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். ௨௨ பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். ௨௩ தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். ௨௪ கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். ௨௫ அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். ௨௬ அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.
போர்வீரர்களின் பரிகாசங்கள்
௨௭ அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, ௨௮ அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, ௨௯ முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, ௩௦ அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். ௩௧ அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
இயேசு சிலுவையில் அறியப்படுதல்
௩௨ போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். ௩௩ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ௩௪ கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். ௩௫ அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ௩௬ அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். ௩௭ அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். ௩௮ அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். ௩௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ௪௦ தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். ௪௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: ௪௨ மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். ௪௩ தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். ௪௪ அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
இயேசுவின் மரணம்
௪௫ நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. ௪௬ மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். ௪௭ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ௪௮ உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். ௪௯ மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். ௫௦ இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். ௫௧ அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. ௫௨ கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. ௫௩ அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். ௫௪ நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். ௫௫ மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். ௫௬ அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.
இயேசு அடக்கம்செய்யப்படுதல்
௫௭ மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, ௫௮ பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். ௫௯ யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, ௬௦ தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான். ௬௧ அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
இயேசுவின் கல்லறைக்குக் காவல்
௬௨ ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ௬௩ ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. ௬௪ ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். ௬௫ அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான். ௬௬ அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.