அத்தியாயம்– ௩
சர்தை சபைக்கு தூதனின் செய்தி
௧ சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய். ௨ நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை. ௩ எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய். ௪ ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள். ௫ ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன். ௬ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
பிலதெல்பியா சபைக்கு தூதனின் செய்தி
௭ பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது; ௮ நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். ௯ இதோ, யூதர்களாக இல்லாதிருந்தும் தங்களை யூதர்கள் என்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாக இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன். ௧௦ என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன். ௧௧ இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு. ௧௨ ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். ௧௩ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
லவோதிக்கேயா சபைக்கு தூதனின் செய்தி
௧௪ லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய படைப்பிற்கு ஆதியுமாக இருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; ௧௫ உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும். ௧௬ இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். ௧௭ நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; ௧௮ நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். ௧௯ நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு. ௨௦ இதோ, வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவன் வீட்டிற்குள் சென்று, அவனோடுகூட உணவு உண்பேன், அவனும் என்னோடு உண்பான். ௨௧ நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன். ௨௨ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது என்றார்.