ஆதியாகமம்

அதிகாரம்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50


-Reset+

அதிகாரம் 37

1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
3 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
4 அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
5 யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
6 அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
8 அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
9 அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
10 இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.
11 அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
12 பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
13 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
14 அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய க்ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
15 அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
16 அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
17 அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
18 அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
19 ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,
20 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
21 ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
22 அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
23 யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
24 அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
25 பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
26 அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
27 அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.
28 அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
29 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
30 தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
31 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
32 பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
33 யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,
34 தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
35 அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
36 அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.