1 சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
2 பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள்.
3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
4 அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.
5 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
6 அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
7 தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
8 ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
9 பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
10 அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.
11 தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.
12 பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
13 அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.
14 புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.
15 ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
16 அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான் தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
17 செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.
18 அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம்விசாரித்தான்.
19 பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
20 அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
21 தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
22 தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.