1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
2 ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
3 அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
5 அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
6 கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
8 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.
9 இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
11 நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
12 இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
13 நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,
14 தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
16 அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
17 நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18 அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரிசொல்லக்கடவர்கள்.
19 எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
20 ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
21 வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
22 மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.
23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,
26 எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.