1 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
2 அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
3 தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்.
4 அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
5 ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
6 மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையுடைய ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,
7 போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
8 அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
9 தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
10 அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.
11 பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்.
12 அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
13 தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும்.
14 அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.
15 இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.
16 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.
17 அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.
18 அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
19 பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
20 அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.
21 பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
22 பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
23 இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
24 அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.